“25 வயது வரை தற்கொலை செய்யவே எண்ணினேன்”- ஏ.ஆர்.ரஹ்மான்
25 வயது வரை தற்கொலை செய்யவே எண்ணியிருந்ததாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்கர் உள்ளிட்ட ஏகப்பட்ட விருதுகளுக்கு சொந்தக்காரர் ஏ.ஆர்.ரஹ்மான். அவரின் பாடலுக்கு ரசிகர்கள் அதிகம். இன்று புகழின் உச்சத்தில் இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் ஒருகாலத்தில் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார். தன்னுடைய கடின வாழ்க்கை குறித்து தற்போது அவர் தனது சுயசரிதையில் பகிர்ந்துள்ளார். அதில், “ என்னுடைய அப்பா என் 9-வது வயதில் இறந்துபோனார். அதன்பின் வெறுமையே மிஞ்சியிருந்தது. என்னென்மோ நடந்தது. நாங்கள் நன்றாக இல்லை என்பதை தெளிவாக உணர முடிந்தது. 25 வயது வரை தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்திலேயே இருந்தேன். அந்த வாழ்க்கை முறை தான் எனக்கு மிகந்த தைரியத்தையும் கொடுத்தது.
‘ரோஜா’ படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைக்கும் முன்பே முஸ்லிம் மதத்திற்கு மாறினேன். சிலவற்றை மறக்க நினைத்தேன். என் வாழ்க்கை முறையை மாற்ற நினைத்தேன். அப்படித்தான் என் பெயரையும் மாற்றினேன். எனக்கு முதலில் இருந்தபெயர் திலீப் குமார். என்னுடைய திலீப் குமார் என்ற பெயரை நான் ஒருபோதும் விரும்பியதில்லை. உண்மையில் அதனை முழுமையாக வெறுத்தேன். வேறு ஒரு மனிதராக மாற நினைத்தேன். பெயரை மாற்றினேன். புது மனிதராகவும் பொழிவு பெற்றேன். பழைய விஷயங்களில் இருந்து என்னை விடுவித்துக் கொண்டேன்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “ இரவு நேரம் என்பது மிகவும் அமைதியான நேரம். அதை நான் அதிகம் விரும்புகிறேன். அதனாலேயே இரவு நேரங்களில் இசை அமைக்கும் பணியை மேற்கொள்கிறேன். பொதுவாக இசையமைக்கும் பணிக்கு நான் சென்றுவிட்டால் இந்த உலகத்தையே மறந்துவிடுவேன். அப்படியிருக்க காலை நேரங்களில் பணியை மேற்கொள்ளும்போது யாராவது ஒருவர் வந்து கதவை தட்டினால் நான் இந்த உலகத்திற்கு வர வேண்டியிருக்கிறது. மறுபடி நான் விட்ட சிந்தனைக்கு மீண்டும் செல்வது கடினமான ஒன்று. இதனாலேயே பெரும்பாலும் வேலைகளை இரவு அல்லது அதிகாலை நேரங்களில் செய்கிறேன்’’ என கூறியுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கை சுயசரிதை ‘நோட்ஸ் ஆஃப் ஏ ட்ரீம்’ என்னும் பெயரில் தயாராகியுள்ளது. கிருஷ்ணா திரிலோக் என்பவர் இந்த சுயசரிதையை எழுதியுள்ளார். தன்னுடைய இளமைக்கால கஷ்டம், வெறுமை, தந்தையின் இறப்பு, இசை மீதான அவரின் காதல் உள்ளிட்ட பல விஷயங்கனை ஏ.ஆர்.ரஹ்மான் இதில் மனம் திறந்து பேசியுள்ளார்.