உண்மைக்கதை, கம் பேக் விமல் - தமிழ் வெப் சீரிஸின் சாபத்தைப் போக்குமா ‘விலங்கு’!

உண்மைக்கதை, கம் பேக் விமல் - தமிழ் வெப் சீரிஸின் சாபத்தைப் போக்குமா ‘விலங்கு’!
உண்மைக்கதை, கம் பேக் விமல் - தமிழ் வெப் சீரிஸின் சாபத்தைப் போக்குமா ‘விலங்கு’!

விமல், இனியா, முனீஸ்காந்த் ராமதாஸ், என்.ஆர்.மனோகர் உள்ளிட்டோர் நடிப்பில் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிப்பில் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் வெப் சீரிஸ்தான் ‘விலங்கு’.

காட்டுப் பகுதியில் அழுகிய நிலையில், தலை துண்டிக்கப்பட்டு ஒரு பிணம் கண்டெடுக்கப்படுகிறது. அந்த கொலையைத் துப்பு துலக்க தொடங்கும் காவல்துறையினரின் பயணமே விலங்கு. கொலையாளியை கண்டுபிடித்தனரா, எதற்காக கொலை நடைபெற்றது, காவல்துறையினர் புத்திசாலித்தனமாக நடந்துகொண்டார்களா அல்லது ஏமாற்றப்பட்டனாரா என சொல்லி முடிகிறது ஸீ ஓடிடியில் வெளியாகியிருக்கும் இந்த வெப் சீரிஸ்.

மர்டர் மிஸ்டரி கதையை மிக யதார்த்தமாக கிராமத்து பின்னணியில் உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ். இந்தத் தொடர் முழுக்க முழுக்க வேம்பூர் காவல் நிலையத்தில் நடப்பதுபோல் உருவாக்கப்பட்டுள்ளது. 7 அத்தியாயங்களைக் கொண்ட இந்த இணையத் தொடரின் 75 சதவீத காட்சிகள் காவல் நிலையத்திலேயே நடைபெறுகின்றன. அதற்காக அமைக்கப்பட்ட செட் மிகக் கச்சிதமாக கதையோடு பொருந்துகிறது.

திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற இரண்டு உண்மைச் சம்பவங்களை ஒரே கதையாக உருவாக்கி சுவாரசியம் குறையாமல் படமாக்கியிருக்கிறார் இயக்குனர். இதில் நடித்த அனைவரையும் மிக நேர்த்தியாக தேர்வு செய்து, அவர்களிடம் இயல்பான நடிப்பை வாங்கியுள்ளார் பிரசாந்த்.

விமல் நடிப்பில் வெளியான சமீபத்திய படங்கள் தோல்வியைக் கொடுத்த நிலையில் இந்த விலங்கு இணையத் தொடர் அவருக்கு மீண்டும் இழந்த பெயரைப் பெற்றுக் கொடுக்கும். அதேபோல் அவருக்கு மனைவியாக நடித்துள்ள இனியாவுக்கும். அந்தக் கதாபாத்திரத்திற்கு குறைந்த காட்சிகளே என்றாலும், அதில் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் மறைந்த என்.ஆர்.மனோகர், டி.எஸ்.பியாக வரும் வாலி, வரலாறு படத் தயாரிப்பாளர் ‘நிக் ஆர்ட்ஸ்’ சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ள பால சரவணன் ஆகியோர் பிரமாதப்படுத்தி உள்ளனர். இவர்கள் அனைவரையும் விட அறிமுக நடிகர் ரவி விலங்கு திரைப்படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இது அவருக்கு முதல் படமாக இருந்தாலும் கைதேர்ந்த நடிகர் போன்ற நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டுகிறார்.

முதல் இரண்டு பகுதி கதைக்குள் நாம் நுழைய உதவும் வகையில் பொறுமையாகச் சொல்லப்பட்டிருந்தாலும் அதன்பிறகு 3, 4, 5 ஆகிய பகுதிகள் கதையை சுவாரசியமாகவும் வேகமாகவும் நகர்த்திச் செல்கின்றன. முதல் கொலை பற்றிய விசாரணையைத் தொடங்கும்போது அதை அடுத்தடுத்த கட்டங்களை நகர்த்தி செல்லும் காட்சிகளும், திரைக்கதையும் ரசிக்க வைக்கிறன. வில்லன் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதம் பார்ப்பவர்களை நிச்சயம் கவரும்.

மர்டர் மிஸ்டரி என்பதால் திரைப்படங்களில் இடம் பெறும் மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளை தவிர்த்து, மற்றவை மிக எளிமையாக யதார்த்தமாகப் படமாக்கப்பட்டுள்ளது. அதுதான் விலங்கு தொடரைத் தனித்துக் காட்டுகிறது.

ஒரு கொலை, அதைத் தேடி புறப்படும் காவல்துறையினர் என இருந்தாலும், அதில் மனிதநேயம், காவல் நிலையத்தில் நடக்கும் நிகழ்வுகள், காவல்துறையினரின் குடும்பங்களின் நிலை என பல்வேறு சம்பவங்களையும் காட்சிகளாக கடத்தியுள்ளார் பிரசாந்த்.

விலங்கு இணையத் தொடர் மிக நேர்த்தியாக படமாக்கப்பட்டதற்கு தினேஷின் ஒளிப்பதிவும், அதை சுவாரஸ்யமான அனுபவமாக மாற்றுவதில் Super Singer Ajesh -யின் இசையும் முக்கிய பங்கு வகிக்கிறது.

Zee5 OTT தளத்தில் இந்த வாரம் வெளியாகியிருக்கும் விலங்கு இணையத் தொடரை நிச்சயம் பார்த்து ரசிக்கலாம். தமிழில் வெளியான வெப் சீரிஸ்களில் பெரும்பாலானவை பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறவில்லை. இந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளில் இணையத் தொடர்கள் கலக்கும் நேரத்தில் தமிழில் வரும் 90% வெப் சீரிஸ்க்கு வரவேற்பு குறைவாக இருந்தது என்பது உண்மைதான். விலங்கு அதை உடைக்கும் என நம்பலாம்.

- செந்தில் ராஜா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com