விஜயுடன் இணைந்தார் நடிகர் விவேக்: ‘தளபதி63’அப்டேட்
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள திரைப்படம் ‘தளபதி63’ ல் நடிகர் விவேக் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘சர்கார்’ படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கவுள்ள திரைப்படம் ‘தளபதி63’. பெயரிப்படாத இந்தப் படத்தினை அட்லி இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ‘தெறி’, ‘மெர்சல்’ உள்ளிட்ட இரண்டு படங்களை விஜய்யை வைத்து இயக்கி உள்ளார். வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றியை இந்த இரு படங்களும் ஈட்டின. இதனை ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகி இருக்கிறார். இதன் மூலம் பெரிய இடைவெளிக்குப் பிறகு நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக இணைகிறார்.
இந்நிலையில், ‘தளபதி63’ படத்தில் விஜய், கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகின. இதற்காக, கால்பந்து பயிற்சியையும் அவர் தொடங்கியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. இந்தத் திரைப்படம் மார்ச் மாதம் தொடங்கவுள்ளதாகவும் தீபாவளிக்கு படம் ரீலிஸ் ஆகவுள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்களில் பெயர்களை படக்குழு அறிவித்து வருகிறது.
இந்நிலையில் படத்தில் நடிகர் விவேக் நடிக்க இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து பதிவிட்டுள்ள இயக்குநர் அட்லி, ''நடிகர் விவேக்கின் மிகப்பெரிய ரசிகன் நான். அவரை இயக்க வேண்டுமென்பது என் நீண்டகால ஆசை. மிக்க மகிழ்ச்சி'' என்று தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளித்துள்ள நடிகர் விவேக், ''நீங்கள் சொல்வது அத்தனை இனிமையாக இருக்கிறது. உங்களுடனும், சகோதரர் விஜயுடன் பணியாற்றவும் நான் ஆவலாக இருக்கிறேன். மனிதாபிமானம் மிக்க நல் இதயம் கொண்ட விஜய் அவர்களுடன் மீண்டும் இணைவது எனக்கும் அவரது ரசிகப்பெருமக்களுக்கும் பெருமகிழ்ச்சி'' என்று தெரிவித்துள்ளார்.
பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்த கதிரும் ‘தளபதி63’ நடிக்க இருப்பதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.