’வலிமை’ படத்தில் பாடல் எழுதியுள்ள ’தெருக்குரல்’ அறிவு?
எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடியாத நிலையில் தள்ளிப்போனது. தற்போது படப்பிடிப்புகள் நடத்த அனுமதி அளித்துள்ளதால், தற்போது முக்கியமான சண்டைக் காட்சிகளும் இணைப்புக் காட்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடல் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது என்று உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இப்படத்திற்கு ‘தெருக்குரல்’ அறிவு ஒரு ராப் பாடலை எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனை உறுதிப்படுத்தும் விதமாக வலிமை மோஷன் போஸ்டர் வெளியானபோது ‘தெருக்குரல்’ அறிவு, தாமரை, விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் டேக் செய்யப்பட்டிருந்தார்கள்.
மேலும், விக்னேஷ் சிவன், தாமரை உள்ளிட்டோரும் பாடல்கள் எழுதியுள்ளனர். அறிவு எழுதிய பாடல் ‘வலிமை’ படத்தில் அஜித்தின் அறிமுகப் பாடலாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.‘காலா’ படத்தில் ‘உரிமையை மீட்போம்’ பாடல் மூலம் அறிமுகமான அறிவு பாடகராகவும் பாடல் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். விஜய்யின் ’மாஸ்டர்’படத்தில் ‘வாத்தி ரெய்டு’ பாடலை அறிவுதான் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.