மத்திய அரசு இந்தி மொழியை திணிக்கவில்லை - தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா
மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக இல்லை, மற்றொரு மொழியை தெரிந்து கொள்வதில் தவறில்லை என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.
கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் தனியார் மையம் சார்பில் பிரதமர் பிறந்தநாள் விழா கொண்டாட்ட குறும்பட போட்டியின் பரிசளிப்பு விழா நடைபெற்றது. பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இதில் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “ மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக இல்லை; மற்றொரு மொழியை தெரிந்து கொள்வதில் தவறில்லை. இதனை அரசியாலாக்குகிறார்கள். ஒரு வேளை அனைவரும் கற்றுக்கொண்டால் நாமும் கற்க வேண்டிய நிலை வந்து விடுமோ என இந்தி திணிப்பு என சொல்பவர்கள் நினைக்கிறார்கள் போல.
பொது மொழி ஒன்று இருப்பது அவசியம்; ஒரு மொழி இருப்பதால் இன்னொரு மொழி அழியும் என்ற பிரசாரம் ஒரு கும்பலால் தவறாக இங்கு பரப்பப்படுகின்றது. 90% தமிழர்களுக்கு மத்திய அரசின் திட்டம் தெரிவதில்லை, அதற்கு மொழியும் காரணம். மோடி பேச்சை நான் மொழி மாற்றம் செய்ய விரும்புகிறேன். அதற்கான உரிமம் வாங்கலாம் என நினைக்கிறேன்.” என பேசினார்.
விழா முடிந்து பேட்டியளித்த ஞானவேல் ராஜா, “ இந்தி என்பது இன்னொரு மொழி, அது திணிப்பு இல்லை, இந்தி படிப்பு. பொதுவான மொழி இருப்பது தவறில்லை. மக்களுக்கு பயன்படுகிறதா என்று பார்ப்பதில்லை; ஏதோ ஒரு விதத்தில் அவர்களுக்கு பயன்படுகிறது. அரசியலுக்காக செய்கிறார்கள். ‘உத்தமவில்லன்’ பட விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இது பிரச்னையாக வெளி வந்ததே துரதிர்ஷ்டவசமானது.” என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது, இதில் இயக்குநர் கஸ்தூரி ராஜாவும் கலந்துக்கொண்டார்.