மோதிக் கொண்ட இரண்டு இரயில்கள். - காப்பாற்றப்பட்ட ஓவியங்கள்., The Train (1964)

மோதிக் கொண்ட இரண்டு இரயில்கள். - காப்பாற்றப்பட்ட ஓவியங்கள்., The Train (1964)
மோதிக் கொண்ட இரண்டு இரயில்கள். - காப்பாற்றப்பட்ட ஓவியங்கள்., The Train (1964)

சம்பவங்கள் செய்திகளாகின்றன செய்திகள் வரலாறாகிறது. அதிலும் உலகம் உயிரோடு சுழலும் மட்டும் நாம் அசைபோடத் தேவையான கதைகளை இதுவரை நடந்த யுத்தங்கள் எழுதி முடித்திருக்கின்றன. அவற்றை தொடர்ந்து கலையானது தனக்கேயான மொழியில் பேசி வருகிறது. 1964-ல் இயக்குநர் ஜான் இயக்கிய “தி ட்ரெயின்” திரைப்படம் ஒரு சரித்திர நிகழ்வை ஆக்‌ஷன் பாணியில் பேசுகிறது.

"தி ட்ரெயின்" (1964)

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் நாஜிப் படைகள் பிரான்ஸ் நாட்டை தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தது. 1944 யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம். நாஜிப்படைகள் பின்வாங்கும் நிலை ஏற்படுகிறது. பாரீஸில் உள்ள நாஜிப் படைகள் உடனே ஜெர்மன் திரும்ப வேண்டும் தாமதித்தால் எதிரிநாடுகளால் சில நாட்களில் நாஜிப்படைகள் துவம்சம் செய்யப்படும் சூழல் ஏற்படலாம். இந்நிலையில் முடிந்த மட்டும் வேண்டியதை சுருட்டிக் கொண்டு நாஜிப் படைகள் இரயில் மார்க்கமாக ஜெர்மன் திரும்புகின்றன.

பொதுவாக யுத்தங்களின் பின்னால் யாரோ ஒருவரின் அதிகார வெறி தவிர்த்து வேறு சில ஆதாயங்களும் இருக்கும். இன்றளவும் வல்லாதிக்க நாடுகள் எண்ணெய் வளம் மிகுந்த தேசங்களை யுத்தம் என்ற பெயரில் சுரண்டிக் கொண்டிருப்பது ஊர் அறிந்த ரகசியம்.

ஜெர்மன் திரும்பும் முன் பாரீஸில் இருக்கும் புகழ் பெற்ற மியூசியம் Jeu de paume-விற்கு நாஜிப் படைகளின் கர்னல் ஒருவர் வருகிறார். அங்கு பிகாசோ உள்ளிட்ட புகழ்பெற்ற ஓவியர்கள் பலரது ஓவியங்கள் உள்ளன. அவற்றின் மதிப்பை அறிந்த அவர் தனது படைகளின் உதவியுடன் ஒரு தனி இரயில் மூலம் அந்த ஓவியங்களை ஜெர்மனிக்கு கடத்த ஏற்பாடு செய்கிறார்.

மியூசியத்தின் பெண் அதிகாரியான ’விலாத்’ தமது தேசத்தின் கலைப் பொருட்கள் திருடு போவதை தடுக்க இரயில்வே அதிகாரி லிபாசேவின்  உதவியை நாடுகிறாள். முதலில் தயங்கும் அவர் பிறகு இரயில் பயணத்தில் தடைகளை ஏற்படுத்துவதுவதன் மூலம் அவற்றை காப்பாற்ற முடியும் என நம்புகிறார். அதற்காக அவர் தன் நண்பர்களுடன் மேற்கொள்ளும் சாகச நடவடிக்கைகள் தான் படத்தின் எக்ஸ்ப்ரஸ் வேக திரைக்கதை.

நாஜி ராணுவ கர்னல் வான் வால்ஹெம் ”பணம் என்பது ஆயுதம், இந்த ஓவியங்கள் தங்கத்தை விட மதிப்பு மிக்கவை” என்கிறார் இது தான் படத்தின் மூலக்கரு.

1964ஆம் வருடம் இத்தனை பிரம்மாண்டமான ஒரு சினிமாவை உருவாக்கியிருப்பதே ஒரு சரித்திர சாதனை தான். நாயகனுக்கு இத்தனை சிக்கல்கலுக்கு இடையிலும் ஒரு பெண்ணின் காதல் கிடைக்கிறது. ஆனால் அதுவும் ஒரு இரயில் பயணம் போல சில நிமிடங்களில் கடந்து போய்விடும் காட்சிகள் இதம் சேர்க்கிறது.

ஓவியங்கள் ஏற்றிக் கொண்டு செல்லும் ஜெர்மன் இரயிலை அதன் பயண திசைக்கு எதிர் திசையில் மாற்றுகிறார்கள் நாயகனும் அவனது சகாக்களும்.

எதிர் திசையில் செல்லும் போது இரயில் நிலையங்களின் பெயர்களை அதிரடி வேகத்தில் மாற்றும் தந்திரம், தண்டவாளங்களை பாதை மாற்றுவது என நுட்பமான சுவாரஸ்யங்கள் நிறைந்ததாக இருக்கிறது இந்தப் பயணம். கிராபிக்ஸ் வசதிகள் எல்லாம் இல்லாத காலத்தில் இரண்டு இரயில்களை நிஜமாகவே மோதச் செய்து படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ஜான். இரயில் பாதையினை குண்டு வைத்து தகர்க்கும் ஒரு காட்சிகாக ஐம்பதுபேர் கொண்ட ஒரு குழு ஒன்றரை மாதம் வேலை செய்திருக்கிறது. 

வான்வெளி தாக்குதல் காட்சியில் விமானங்கள் பார்வையிலும் காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருப்பது ஆச்சர்யம். Jean Tournier.  Walter Wottitz என இருவர்  இந்த சாகசங்களை ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். அந்த காலத்திலேயே ஏழு கேமராக்கள் பயன்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும் ’தி ட்ரெயின்’.

படத்தின் நாயகன் Burt Lancaster நியூயார்க்கில் 1913ல் பிறந்தார். The killers, the swimmer, The Leopard, Trapeze உள்ளிட்ட திரைப்படங்களில் மின்னிய இந்த  நட்சத்திரம் 1994 அக்டோபரில் கலிபோர்னியாவில் மறைந்தது. 

BAFTA விருது, ஆஸ்கர் விருது உள்ளிட்ட விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட  இத்திரைப்படம். Laurel விருது (1965), National Board of Review, USA (1966) போன்ற விருதுகளை பெற்றது.

இறுதிகாட்சியில் ”கலை என் போன்ற கலாரசிகர்களுடன் வாழ்கிறது” என பேசும் நாஜி கர்னல் வால்ஹெமிற்கு, லிபசே துப்பாக்கி குண்டுகளால் பதிலுரைக்கிறான். களவுக்கு அப்பாற்பட்டது கலை. தூரிகையை திருடலாம் விரல்களை அல்ல.


வீடியோ :

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com