’மதம் மாத்த முயற்சி..’ - சீமான், அண்ணாமலை வெளியிட்ட நடிகர் விமல் படத்தின் ட்ரெய்லர்! எப்படி இருக்கு?
தமிழ்க்குடிமகன் படத்தின் மூலம் கவனம்பெற்ற இயக்குநர் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில், நடிகர் விமல் நடித்திருக்கும் திரைப்படம் ’பரமசிவன் பாத்திமா’. கதாநாயகனாக விமல் லீட் ரோலில் நடித்திருக்கும் இப்படத்தில், சாயாதேவி, எம்.எஸ்.பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
விமலின் 34வது படமாக உருவாகியிருக்கும் ’பரமசிவன் பாத்திமா’ படத்தின் கதை, காதலுக்கு தடையாக நிற்கும் மதங்கள் குறித்து விவரிப்பதாக எடுக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு மதங்களுக்கு இடையே காதலித்து திருமணம் செய்தால், திருமணத்திற்கு பின் மணமகனை கிராமமே சேர்ந்து கொல்வது போலவும், அது தொடர்ச்சியாக நடக்க, காவல்துறை அதை கண்டுபிடிக்கிறதா? இல்லையா? என்பதுபோல் படத்தின் திரைக்கதை இருக்கும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், பரமசிவன் பாத்திமா படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதனை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் ஒரே நேரத்தில் வெளியிட்டுள்ளனர்.
எப்படி இருக்கிறது டிரெய்லர்?
படத்தின் டிரெய்லர் ஆரம்பமாகும்போதே காதல் ஜோடிகளை கொலைசெய்வது போலவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சுப்ரமணியபுரம் என்ற இந்து கிராமத்திற்கும், யோக்கோபுரம் என்ற கிறிஸ்துவ கிராமத்திற்கும் இடையே தொடர்ந்து கொண்டே இருக்கும் மோதலை வெளிப்படுத்தும் விதமாக கதை நகர்கிறது. இடையில் சுப்ரமணியபுரத்தின் இளைஞர் விமலும், யோக்கோபுரத்தின் சாயாதேவியும் காதல்செய்யும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
ஒரு காட்சியில் யாரைத்தேடி காவல்துறையினர் போறாங்க என சாயாதேவி, விமலிடம் கேட்க, நம்மைத் தேடித்தான் என்று கூறுகிறார். அதன்படி பார்த்தால் இந்த ஜோடியும் கிராமத்தினரால் கொல்லப்பட்டது போலவும், அதற்குபிறகே கிராமத்தில் பிரச்னைகள் ஆரம்பிப்பது போலவும் கதை சொல்லப்பட்டுள்ளது.
மதம் மாத்த முயற்சி பண்ணாதிங்க, சர்ச்சுல மாரியம்மன் சிலையை கொண்டுவந்து வச்சிட்டாங்க, அதுக்கப்புறம் மாரியம்மன மேரியம்மனா கும்பிட ஆரம்பிச்சிட்டாங்க, மதம் மாற்ற முயற்சி பன்றவனும், மதம் மாறுனவனும் சண்டை போட்டுகிட்டு மதக்கலவரம்னு சொல்றீங்க போன்ற சர்ச்சைக்குரிய வசனங்களும், முஸ்லீம் தொப்பியை போட்டிருக்கும் இளைஞர் ஒருவர் கோவிலில் சாமிவந்து ஆடுவது போன்ற சர்ச்சைக்குரிய காட்சிகளும் இடம்பிடித்துள்ளன.
பின்னர் சமூக நல்லிணக்க திருமணம் என்று காவல்துறையினரே திருமணம் நடத்திவைக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. அதைவைத்து காவல்துறை நடக்கும் குற்றங்களை கண்டுபிடிக்க முயற்சி செய்யும்விதத்தில் கதை நகர்வு இருக்க வாய்ப்பு இருக்கிறது. சர்ச்சைக்குரிய வசனங்கள், காட்சியமைப்புகள் தாண்டி மதங்கள் காதலுக்கு எதிராக ஏற்படுத்தி வைத்திருக்கும் கண்மூடித்தனமான விசயங்களை வெளிப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டிருப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது.