மோகன் ராஜா - பிரசாந்த் இணையும் இந்தி பட ரீமேக்!
இயக்குநர் மோகன் ராஜா அடுத்து நடிகர் பிரசாந்துடன் கைகோர்க்கவுள்ளார். இந்தியில் வெளியான ‘அந்ததுன்’ திரைப்படத்தின் ரீமேக்கை தமிழில் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘அந்ததுன்’. த்ரில்லர் படமான ‘அந்ததுன்’ தமிழில் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் ஏற்கெனவே வெளியாகின. இந்தப் படத்துக்கான உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கியுள்ளதாகவும், தனது மகனான பிரசாந்தை அப்படத்தில் நடிக்க வைக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. முதலில் கவுதம் மேனன் இயக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இயக்குநர் மோகன்ராஜா இத்திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மோகன்ராஜா கடைசியாக வேலைக்காரன் திரைப்படத்தை இயக்கினார். இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு பேசிய 'தியாகராஜன், “ ‘அந்ததுன்’ படத்தின் ரீமேக் உரிமைக்கு தமிழில் பல தயாரிப்பு நிறுவனங்கள் போட்டியிட்டன. ஆனால் நாங்கள் படம் வெளியாவதற்கு முன்பே படத்திற்கான உரிமைக்கு அனுமதி வாங்கிவிட்டோம். ஏனென்றால் படத்தின் கதை அந்த அளவுக்கு சுவாரஸ்யமானது.
இந்தப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கவுள்ளார். மற்ற நடிகர்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளனர். பிரசாந்திற்கு உண்மையாகவே பியானோ வாசிக்கத் தெரியும் என்பதால் இந்தப் படத்திற்கு அவர் மிகச்சரியாக இருப்பார்'' என தெரிவித்துள்ளார்.
விரைவில் படம் தொடங்கப்படவுள்ள நிலையில் இந்தியில் தபு நடித்த கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.