கையால் வரையப்பட்ட 84,000 கார்ட்டூன்கள் -ரஜினியின் ‘ராஜா சின்ன ரோஜா’ பாடலின் வியப்பான தகவல்

கையால் வரையப்பட்ட 84,000 கார்ட்டூன்கள் -ரஜினியின் ‘ராஜா சின்ன ரோஜா’ பாடலின் வியப்பான தகவல்
கையால் வரையப்பட்ட 84,000 கார்ட்டூன்கள் -ரஜினியின் ‘ராஜா சின்ன ரோஜா’ பாடலின் வியப்பான தகவல்

நடிகர் ரஜினிகாந்தின் ‘ராஜா சின்ன ரோஜா’ படத்தில் ஒரு பாடலில் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் உருவானது குறித்து ஏ.வி.எம். நிறுவனத்தின் தயாரிப்பாளர் அருணா குகன் தனது ட்விட்டர் பக்கத்தில் சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார்.

ஏ.வி.எம். நிறுவனத்தின் தயாரிப்பில், எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில், ரஜினிகாந்த், கௌதமி, ரகுவரன், ரவிச்சந்திரன், சின்னி ஜெயந்த் ஆகியோர் நடிப்பில், கடந்த 1989-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ராஜா சின்ன ரோஜா’. இந்தப் படத்தில் நடிகராக முயற்சி செய்ய நகரத்திற்கு வரும் ரஜினிகாந்த், பின்னர் ஒரு வீட்டில் குழந்தைகளை பாதுகாக்கும் பொறுப்பேற்க அதனை மையமாக வைத்து கதை நகரும். இந்தப் படத்தில் வந்த பாடல்கள் எல்லாமே இன்றளவும் செம ஹிட். அதிலும், சூப்பர் ஸ்டாரு யாருனா கேட்டா, ராஜா சின்ன ரோஜாவோடு காட்டுப்பக்கம் வந்தானாம் உள்ளிட்ட பாடல்கள் எப்போது கேட்டாலும் குழந்தைகளுக்கு பிடிக்கும்.

அதிலும், ராஜா சின்ன ரோஜாவோடு காட்டுப்பக்கம் வந்தானாம் என்ற பாடலில், குழந்தைகள் மற்றும் கார்ட்டூன்கள் காட்சிகள் பார்வையாளர்கள் ஈர்க்கும் வகையில் இருக்கும். இந்நிலையில், அந்தக் காலத்தில் இந்த அனிமேஷன் காட்சிகள் உருவான விதம் குறித்து ஏ.வி.எம். நிறுவனத்தின் தற்போதைய தயாரிப்பாளர் அருணா குகன் தனது ட்விட்டர் பக்கத்தில் சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில், “நடிகர்கள் மற்றும் அனிமேஷனை இணைத்த முதல் இந்தியத் திரைப்படம். எஸ்பி முத்துராமன் இயக்கிய ‘ராஜா சின்ன ரோஜா’ (1989) படம், எங்களின் சாதனைப் படங்களில் ஒன்று. "ராஜா சின்ன ரோஜாவோடு, காட்டு பக்கம் வந்தானாம்.." பாடலை விளக்கி அனிமேஷன் செய்யும்படி பாம்பேயைச் சேர்ந்த சிறந்த கார்ட்டூனிஸ்ட் ராம் மோகனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஒரு முழுப் பாடலையும் தன்னால் அனிமேஷன் செய்வது சாத்தியமில்லை என்று முதலில் அவர் மறுத்துவிட்டார்.

இருப்பினும், எஸ்.பி. முத்துராமன் சார், தயவு செய்து எங்களது கோரிக்கையை பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும் அவர், கார்ட்டூனிஸ்ட் ராம் மோகனிடம் மூன்று மாதங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்றும், முதலில் குழந்தைகளுடன் பாடல் காட்சியை படமாக்குவதாகவும், அனிமேஷன் காட்சியை பின்னர் சேர்க்கலாம் என்றும் கூறினார். இதையடுத்து இறுதியாக கார்ட்டூனிஸ்ட் ராம் மோகன் அதனை ஏற்றுக்கொண்டு, 84,000 கார்ட்டூன்களை கொண்டு பாடலில் உள்ள ஆக்ஷன் காட்சிகளை வரைந்தார். இதில் என்ன புதுமை இருக்கிறது என்று இன்று மக்கள் யோசிக்கும் வேளையில், ஒவ்வொரு காட்சியும் கணினி வரைகலை மூலம் அல்ல, கையால் வரையப்பட்டு உயிர்ப்பிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டு வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com