பிறந்தநாளில் வெளியாகும் பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ சிறப்பு டீசர்
பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் சிறப்பு டீசர் வரும் அக்டோர் 23 ஆம் தேதி வெளியாகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘சாஹோ’ படத்திற்குப் பிறகு பிரபாஸ் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில்‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். முழுக்க முழுக்க காதல் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் பாக்யஸ்ரீ, சச்சின் கடேகர், முரளி சர்மா என பலரும் நடித்துள்ளனர்.1970-களில் ஐரோப்பாவில் நடக்கும் காதல் கதையாக உருவாக்கப்படும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
இந்த நிலையில், பிரபாஸின் பிறந்தநாளையொட்டி வரும் அக்டோபர் 23 ஆம் தேதி சிறப்பு டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. பிரபாஸின் கதாபாத்திரமான விக்ரமாதித்யா குறித்த இந்த சிறப்பு டீசர் ஆங்கிலத்தில் வசனங்களை கொண்டிருக்கும். பல்வேறு மொழிகளில் சப்-டைட்டில்களோடு இது வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

