கன்னட சினிமா | மிகப்பெரிய மல்டி ஸ்டாரர் படமாக உருவாகியிருக்கும் ’45’.. VFX-ல் மிரட்டும் டீசர்!
கன்னட சினிமாவின் மிகப்பெரிய ஸ்டார்களான சிவராஜ் குமார், உபேந்திரா, ராஜ் பி. ஷெட்டி மூன்றுபேரும் ஒன்றாக இணைந்து மிகப்பெரிய மல்டி ஸ்டாரர் திரைப்படமாக உருவாகியிருக்கும் படம் ‘45’. இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
சூரஜ் புரொடக்ஷன்ஸ் ரமேஷ் ரெட்டி தயாரிக்கும் இப்படத்தில் சத்யா ஹெக்டே ஒளிப்பதிவாளராகவும், கேஎம் பிரகாஷ் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். படத்தை இயக்குவது மட்டுமில்லாமல் இசையமைப்பாளராகவும் வேலைசெய்துள்ளார் அர்ஜுன் ஜன்யா.
கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் கன்னட சினிமாவின் அடுத்த பெரிய வெற்றிதிரைப்படமாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
தொழில்நுட்பத்தில் மிரட்டும் டீசர்..
அறிமுக திரைப்படத்திலேயே சிவராஜ் குமார், உபேந்திரா, ராஜ் பி. ஷெட்டி முதலிய மூன்று பெரிய தலைகளை இணைத்திருக்கும் அர்ஜுன் ஜன்யா, படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளார். தற்போது ரிலீஸ் தேதியுடன் வெளியாகியிருக்கும் படத்தின் டீசரானது, படத்தில் என்னபா பண்ணிருக்க என இன்னும் இரண்டுமடங்கு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ’45 தி மூவி’ சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. MARZ ஸ்டுடியோவின் அதிநவீன VFX மூலம் வெளியிடப்பட்டிருக்கும் டீசரில் சிவராஜ் குமார் மட்டுமே இடம்பெற்றுள்ளார். ஒரு அதிநவீன மோட்டார் பைக்கிள் செல்லும் சிவராஜ்குமாரை, ஆயிரக்கணக்கிலான நபர்கள் துப்பாக்கியால் சுடும்படி இடம்பெற்றிருக்கும் மோஷன் வீடியோவில், இறுதியில் மிகப்பெரிய மலையில் உபேந்திரா, சிவராஜ்குமார், ராஜ் பி. ஷெட்டி மூன்றுபேரின் தலைகளும் இடம்பெற்றுள்ள வகையில் முடிகிறது.
ரிலீஸ் தேதியுடனான டீசரை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.