’முதல் தமிழ் நடிகர்..’ தமிழ்சினிமாவில் இது நடந்ததே இல்லை! விட்ட இடத்தை பிடிக்கும் SURIYA!
விஜய், அஜித் இடையே நம்பர் 1 ரேஸில் இருந்த சூர்யா, அஞ்சான் முதல் கங்குவா வரை தொடர்ச்சியான தோல்வியால் தியேட்டர் கம்பேக் இழந்தார். இந்த பின்னணியில் கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் 250 கோடிக்கு மேல் வசூலித்து பழைய விண்டேஜ் சூர்யா மீண்டும் வந்திருப்பதை நிரூபித்தது.
ஒரு நேரத்தில் விஜய், அஜித் இருவருக்கும் போட்டியாக நம்பர் 1 இடத்திற்கான ரேஸில் இருந்த நடிகர் சூர்யா, பல ட்ரெண்ட் செட்டிங் படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அமைத்துக்கொண்டார். எந்த ரோல் கொடுத்தாலும் அவரால் செய்ய முடியும் என்ற இடத்தில் இருந்த சூர்யாவிற்கு முதல் சறுக்கலாக அமைந்தது அஞ்சான் திரைப்படம். மிகப்பெரிய ஹைப் உடன் வெளியாகி பெரிய டிசாஸ்டராக மாறியது அத்திரைப்படம். அதற்குபிறகு அவர் நடித்து தியேட்டரில் வெளிவந்த மாசு என்கிற மாசிலாமணி, தானா சேர்ந்த கூட்டம், என்ஜிகே, எதற்கும் துணிந்தவன் என அனைத்து படங்களும் ’இதுதான் சூர்யாவின் கம்பேக் திரைப்படம்’ என்ற அனைத்து எதிர்ப்பார்ப்புகளையும் ஏமாற்றங்களாகவே மாற்றியது. அதிலும் பலகோடி ரூபாய் செலவில் உருவாகி மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை கிளப்பிய ‘கங்குவா’ திரைப்படம், சூர்யாவின் சினிமா கரியரிலேயே மிகமோசமான விமர்சனத்தை சந்தித்து பெரிய பெயிலியர் மூவியாக மாறியது.
இதற்கிடையில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற திரைப்படங்கள் நல்ல விமர்சனத்தையும், விருதுகளை வென்றாலும் அவை ஒடிடியில் வெளியான படங்கள் என்பதால், அது அவருடைய தியேட்டர் கம்பேக்காக மாறவில்லை.
ஒரே தமிழ் நடிகராக சாதனை!
இந்தசூழலில் தான் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு திரைப்படம் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து, சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் அதிகப்படியாக வசூலித்த திரைப்படமாக மாறி சாதனை படைத்தது. இதுதான் சூர்யாவின் தரமான கம்பேக் என்று சொல்லப்பட்ட நிலையில், அதைத்தொடர்ந்து வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படமும் மிகப்பெரிய ஹிட்டாக 250 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்படி ஒரே வருடத்தில் வெளியான சூர்யாவின் 2 படங்கள் 250 கோடிக்கும் மேல் வசூலித்திருப்பது, பழைய விண்டேஜ் சூர்யா திரும்பிவிட்டார் என்பதையே உணர்த்தியுள்ளது.
விஜய் ஒருபக்கம் அரசியல், அஜித் ஒருபக்கம் கார் ரேஸ் என சென்றுவிட்ட நிலையில், இருக்கும் வெற்றிடத்தை தனக்கான அச்சாணியாக மாற்றியிருக்கும் சூர்யா, இந்தவருடத்தில் 3வது திரைப்படமாக ‘சீன்’ திரைப்படத்தை தீபாவளிக்கு இறக்குகிறார். சமீபத்தில் வெளியான டைட்டில் டீசர் வீடியோ மூலம் படத்திற்கு 'SCENE' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆவேஷம் திரைப்படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஒரு ஜாலியான, அதே நேரத்தில் நெகட்டிவ் ஷேட் கொண்ட போலீஸ் அதிகாரியாக சூர்யா நடித்துள்ளார். டீசரில் இடம்பெற்ற ‘டேலண்ட் டேலண்ட்னு உருட்டி உருட்டி அந்தாளோட கேவலமான கேரக்டர் எல்லாம் மறைச்சிருங்கடா’ என்ற வசனமும், காவலர் கதாபாத்திரமும் அஜித்தின் மங்காத்தா பாணியை ஒத்தது போல இருக்கிறது. சீன் பட கதையை பொறுத்தவரையில் 900-க்கு மேற்பட்ட குற்றவாளிகளை கொலைசெய்துவிட்டு, தான்தான் என்ற தலைக்கணத்துடன் சீன் போட்டுக்கொண்டிருக்கும் காவலதிகாரிக்கும், ஒரு சைக்கோ கில்லருக்கும் இடையேயான மோதலாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படங்களுக்கு பிறகு சூர்யாவின் சீன் திரைப்படமும் 250 கோடிக்கு மேல் வசூல் செய்தால், ஒரே வருடத்தில் 250 கோடி வசூல் உடன் 3 ஹிட் படங்கள் கொடுத்த ஒரே தமிழ்சினிமா நடிகராக சூர்யா மாறுவார். இதுமட்டும் நடந்தால் சூர்யாவின் கம்பேக்கிற்காக காத்துக்கிடந்த ரசிகர்களுக்கு இந்தாண்டு ட்ர்பிள் கொண்டாட்டமாக மாறும்!

