சத்யராஜ் - வசந்த் ரவியின் `வெப்பன்’ படப்பிடிப்பில் விபத்து; லைட் மேன்-க்கு நேர்ந்த துயரம்!

சத்யராஜ் - வசந்த் ரவியின் `வெப்பன்’ படப்பிடிப்பில் விபத்து; லைட் மேன்-க்கு நேர்ந்த துயரம்!
சத்யராஜ் - வசந்த் ரவியின் `வெப்பன்’ படப்பிடிப்பில் விபத்து; லைட் மேன்-க்கு நேர்ந்த துயரம்!

கும்மிடிப்பூண்டி அருகே ஏ.ஆர்.ஆர். பிலிம் சிட்டியில் படப்பிடிப்பிற்காக 40 அடி உயரத்தில் லைட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நபர் தவறி விழுந்து உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஐயர்கண்டிகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்குச் சொந்தமான ஏ.ஆர்.ஆர். பிலிம் சிட்டி உள்ளது. இங்கு பல்வேறு திரைப்படங்களின் படப்பிடிப்பு, இசையமைப்பு, பின்னணி இசையமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சத்யராஜ் நடிக்கும் 'வெப்பன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்த ஏ.ஆர்.ஆர். பிலிம் சிட்டியில் இன்று காலை சென்னை சாலிக்கிராமத்தை சேர்ந்த குமார் (47) என்ற லைட்மேன் சுமார் 40 அடி உயரத்தில் மின்விளக்குகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக குமார் கால் தவறி கீழே விழுந்து படுகாயமடைந்திருக்கிறார்.

இதையடுத்து உடனடியாக அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த குமாரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து லைட் மேன் குமாரின் சடலம் உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படப்பிடிப்பிற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வந்த லைட்மேன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com