ஆஸ்கர் தேர்வு நடப்பது எப்படி? விருதுப்பட்டியல் ரகசியமானதா?

ஆஸ்கர் தேர்வு நடப்பது எப்படி? விருதுப்பட்டியல் ரகசியமானதா?
ஆஸ்கர் தேர்வு நடப்பது எப்படி? விருதுப்பட்டியல் ரகசியமானதா?

ஆஸ்கர் விருதுகள் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதாகும். 

ஆஸ்கர் விருதுகளை வழங்கும் அகாடெமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் அமைப்பு சுமார் 7 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்டது. தயாரிப்பாளர்கள், படைப்பாளிகள், தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளிட்டோர் இவர்களில் அடங்குவார்கள். 17 பிரிவுகளாக இவர்கள் இயங்குகிறார்கள். இயக்குநர்கள், நடிகர்கள், படத் தொகுப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்ட பிரிவுகள் இருக்கின்றன. ஆஸ்கர் விருதுகள் மொத்தம் 24 பிரிவுகளைக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் தகுதியான திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களை இந்த 17 பிரிவுகளைக் கொண்ட 7 ஆயிரம் பேர்தான் தேர்வு செய்கிறார்கள். ஒவ்வொரு பிரிவிருக்கும் அந்தந்தப் பிரிவுக்கானவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். சிறந்த படத்துக்கான விருதை மட்டும் ஒட்டுமொத்தமாக 7 ஆயிரம் பேரும் சேர்ந்து தேர்வு செய்கிறார்கள். ஒவ்வொரு உறுப்பினரும் தனக்கான பிரிவில் 5 திரைப்படங்கள் அல்லது கலைஞர்களை வரிசைப்படுத்தி பரிந்துரை செய்ய முடியும். இந்தப் பரிந்துரைகளில் போதுமான வாக்குகளைப் பெறுபவர் விருதுக்குத் தேர்வு செய்யப்படுகிறார்.

வாக்கெடுப்பு நடத்தப்படும் காலத்தில் தொடர்புடைய திரைப்படத் தயாரிப்பாளர்கள், அகாடெமி உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டுவது அனுமதிக்கப்படுகிறது. தங்களது திரைப்படங்களைப் பார்க்கச் சொல்வது, சிறப்புத் திரையிடலுக்கு அழைப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஆனால் உறுப்பினர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த வாக்கெடுப்பை நடத்தும் பொறுப்பு பிரைஸ்வாட்டர்ஸ்கூப்பர்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனம் ஒவ்வொரு உறுப்பினரின் வாக்கையும் சேகரித்து ரகசியமாகப் பாதுகாத்து முடிவுகளை அறிவிக்கும் பொறுப்பை மேற்கொள்கிறது. கடந்த 80 ஆண்டுகளாக இந்த நிறுவனமே ஆஸ்கர் விருதுகளை தேர்வு செய்யும் பணியைச் செய்து வருகிறது.

ஒரு திரைப்படம் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட வேண்டுமானால், அது குறைந்தது 40 நிமிடங்கள் ஓடக்கூடியதாக இருக்க வேண்டும். ஆஸ்கர் விருது வழங்கப்படும் ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் வெளியானதாக இருக்க வேண்டும். லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு திரையரங்கில் கட்டணம் செலுத்திப் பார்க்கும் வகையில் 7 நாள்களுக்கு ஓடியிருக்க வேண்டும். வெளிநாட்டு மொழித் திரைப்படம் உள்ளிட்ட சில பிரிவுகளுக்கு மட்டும் இதில் விதிவிலக்கு உண்டு. ஆவணப் படம் என்றால், லாஸ் ஏஞ்சல்ஸ் மட்டுமல்லாமல் நியூயார்க்கிலும் ஓடியிருக்க வேண்டும் என்ற கூடுதல் விதி இருக்கிறது. வெளிநாட்டு மொழித் திரைப்படத்துக்கான பிரிவில் ஒவ்வொரு நாடும் ஒரேயொரு படத்தை மட்டும் பரிந்துரை செய்ய முடியும். இந்த விருதை சிறப்பு நிபுணர்கள் குழுவினர் அறிவிக்கிறார்கள்.

ஆஸ்கர் விருதுகளைப் பெறுவோரின் பட்டியல், அறிவிப்பு வெளியாவதற்கு முந்தைய நாளிலேயே ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் வழக்கம் தொடக்க காலத்தில் இருந்திருக்கிறது. தற்போது பரிசுப் பட்டியல் முற்றிலும் ரகசியமானது. கடைசி நொடி வரைக்கும் யாருக்கும் அந்த விவரம் உறுதியாகத் தெரியாது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com