ரூ.2.6 கோடி மதிப்புள்ள ’அயன்மேன்’ டிரெஸ் மாயம்: போலீஸ் அதிர்ச்சி!
’அயன் மேன்’ படத்துக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு உடை, மாயமானது ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூப்பர் ஹீரோ படங்களில் அதிக வரவேற்பை பெற்ற ஹாலிவுட் படம், ’அயன் மேன்’. மார்வல் காமிக்ஸின் அடிப்படையில் உருவான இந்தப் படத்தை மார்வல் ஸ்டூடியோஸ் தயாரித்தது. 2008-ல் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றதுடன் வசூலிலும் மிரட்டியது. ஜோன் பேவ்ரியூ இயக்கிய இந்தப் படத்தில் ராபர்ட் டோவ்னி ஜூனியர் அயன்மேனாக நடித்திருந்தார். படத்தில் அவர் அணிந்திருந்த அயன்மேன் உடை பேசப்பட்ட ஒன்று. சிறுவர்களை கவர்ந்த உடையாகவும் இது இருந்தது.
முதல் பாகத்தை அடுத்து இந்தப் படத்தின் அடுத்த இரண்டு பாகங்கள் வெளியாயின. இந்நிலையில் முதல் பாகத்தில் ’அயன்மேன்’ அணிந்திருந் த உடை, அமெரிக்காவின் திரைப்படங்களுக்கான பொருட்களை பாதுகாக்கும் மையத்தில் வைக்கப்ப்பட்டிருந்தது. இந்த உடையை இப்போது காணவில்லை. அந்த உடையின் இந்திய மதிப்பு, ரூ. 2.6 கோடி ரூபாய்!
பிப்ரவரி மாதத்தில் இருந்து ஏப்ரல் 25-ம் தேதிக்குள் இந்த உடை கொள்ளையடிக்கப் பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுபற்றி வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரித்து வருகின்றனர். இது ஹாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.