எப்படி இருக்கிறது 'தலைவி': திரை விமர்சனம்

எப்படி இருக்கிறது 'தலைவி': திரை விமர்சனம்
எப்படி இருக்கிறது 'தலைவி': திரை விமர்சனம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள 'தலைவி' திரைப்படம் நாளை வெளியாகிறது.
விஜய் இயக்கியுள்ள 'தலைவி' படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத், எம்.ஜி.ஆராக அரவிந்த் சுவாமி மற்றும் சமுத்திரக்கனி, நாசர், பூர்ணா, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜெயலலிதா என்ற கதாபாத்திரம் நடிகையான முதல் நாளிருந்து தமிழக முதலமைச்சரான முதல் நாள் வரையிலான பயணமே தலைவி. மார்ச் 25, 1989 ஆம் ஆண்டு தமிழக சட்டசபையில் நடைபெற்ற ஒரு நிகழ்வு மற்றும் ஜெயலலிதா எடுக்கும் சபதத்தில் படம் தொடங்கி, பின்னோக்கி பயணிக்கிறது.
தலைவி படத்தின் முதல் பாதி ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் இணைந்து நடித்த படங்கள் அவர்களுக்குள்ளான காதல் மற்றும் பிரிவு ஆகியவற்றை கொண்டு நகர்கிறது. அவர்கள் நடித்த பல திரைப்படங்களின் கதைகளை பாடல் மூலமாக கடந்து சென்றுள்ளார் இயக்குனர் விஜய். இரண்டாம் பாதி ஜெயாவின் அரசியல் நுழைவையும், வளர்ச்சியும், பயணத்தையும் தாங்கிச் செல்கிறது.
தலைவி படத்தில் நடித்துள்ள முக்கிய கதாபாத்திரங்கள் கங்கனா ரணாவத் - அரவிந்த் சுவாமி தொடங்கி, தம்பி ராமையா கதாபாத்திரம் வரை அனைவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். குறிப்பாக, ஆர்என்வி கதாபாத்திரத்தில் வரும் சமுத்திரகனி அசத்தியுள்ளார். அதேபோல் கங்கனா மூன்று நிலைகளை கச்சிதமான நடிப்பால் வேறுபடுத்தியுள்ளார். மேலும் கருணாநிதியாக நடித்துள்ள நாசர், அவரின் குரல் போலவே பேச மெனக்கெட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் வாழ்க்கை படம் என்பதால் திரைக்கதையையும், வசனத்தையும் மிக கவனமாக கையாண்டுள்ளனர். சர்ச்சைகளை தவிர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளனர். அதில் வெற்றியும் அடைந்துள்ளனர். இதனால் எதிர்கட்சிகளின் காட்சிகள் குறைவாகவே உள்ளன. தலைவி சுவாரஸ்யமாக நகர்ந்தாலும் முதல் பாதியில் சில காட்சிகளும், இரண்டாம் பாதியில் ஓரிரு காட்சிகளும் நீளமாக இருப்பதாக தோன்றுகிறது. இருந்தாலும் ஜி.வி.பிரகாஷ்குமாரின் பின்னணி இசை படத்தை தொய்வில்லாமல் நகர்த்திச் செல்கிறது. அதேபோல் விஷால் விட்டலின் ஒளிப்பதிவும் படத்திற்கு வலு சேர்த்துள்ளது.
தலைவி ஜெயலலிதாவின் வாழ்க்கை படமாக இருந்தாலும், பெருமளவு அரசியலைத் தவிர்த்து அவரின் பயணத்தை சொல்லும் விதமாகவே படமாக்கப்பட்டுள்ளது.
- செந்தில் ராஜா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com