அரசன், அடுத்து அரசனாகப் போகும் வாரிசு, பகைமையோடு காத்திருக்கும் சித்தப்பா என காலம்காலமாக பல சினிமாக்களில் பார்த்த கதையை, விலங்குகளின் உலகிற்குள் சித்தரித்து சிலிர்க்க வைக்கும் படம் ‘தி லயன் கிங்’. 1994ம் ஆண்டு வால்ட் டிஸ்னி தயாரிப்பில் வெளியான அனிமேஷன் திரைப்படமான இது, 25 ஆண்டுகளுக்குப் பிறகு லைவ் ஆக்ஷன் அனிமேஷன் முறையில் தயாராகி வெளிவந்திருக்கிறது. `அயர்ன் மேன்', `தி ஜங்கிள் புக்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜான் ஃபேவ்ரே இயக்கத்தில் ‘தி லயன் கிங்’ திரைப்படம் உருவாகியிருக்கிறது.
ஷேக்ஸ்பியரின் ‘ஹாம்லெட்’ கதையை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம் வெளியான நாட்களில் பெரும் வசூல் சாதனைகளைப் படைத்தது. அதோடு, அடுத்தடுத்த தலைமுறையிலும் சிம்பாவிற்கும், டிமூன் அண்ட் பும்பாவிற்கும் ரசிகர்கள் அதிகரித்தபடியேதான் இருந்து வருகின்றனர். இதையெல்லாம் கருத்தில் கொண்டே, ‘Alice in Wonderland’, ‘The Jungle Book’, ‘Cindrella’ வரிசையில் லயன் கிங் படத்தையும் டிஸ்னி ரீமேக் செய்திருக்கிறது.
வெறும் கார்டூன் கதாபாத்திரங்களாக வந்தபோதே மெய் சிலிர்க்க வைத்த முஃபாசாவையும், சிம்பாவையும் அச்சு அசல் பிம்பங்களாக மாற்றி அசரடித்திருக்கிறார்கள். அப்பாவுடன், சிம்பா விளையாடும் காட்சிகளில் அவ்வளவு க்யூட்டாகவும், அரசனாக பிடரி மயிர் அசைய நிற்கும் காட்சிகளில் மாஸாகவும் வடிவமைத்து ஒட்டுமொத்த பாராட்டுகளையும் வாரிக் கொள்கிறது VFX பணியை மேற்கொண்ட ’Moving Picture Company’ டீம். ஒவ்வொருவருக்கும் தனித்தனி பாராட்டுகள்.
கார்டூனில் அனைவரும் பார்த்தப் படம்தான் என்றாலும், அந்தந்த கதாபாத்திரங்களுக்கான உணர்வுகளை செறிவூட்டியிருப்பதில் இயக்குநர் ஜான் ஃபேவ்ரேவின் முந்தைய திரைப்படங்களில் இருந்த அதே தனித்துவம் தெரிகிறது. குட்டி சிம்பாவை மயான பூமிக்கு போக வைக்க Scar பேசும்போதும், அரசனாவதில் இருக்கும் சிக்கல்களை Mufasa மகனுக்கு எடுத்துரைக்கும் காட்சிகளிலும் அவ்வளவு முதிர்ச்சி.
ஹாலிவுட் காட்சிகளை இன்னும் கூடுதலாக ரசிக்க வைத்திருக்கின்றன தமிழ் நடிகர்களின் குரல்கள். குறிப்பாக, வில்லன் ஸ்கார் கதாபாத்திரத்திற்கு ஒலிக்கும் அரவிந்த்சாமியின் குரல் கச்சிதம். மாடுலேஷனிலேயே மிரட்டுகிறார். அது ஒருபுறம் இருக்க, அறிமுகக் காட்சியிலிருந்து ஜாலியாக சிரிக்க வைக்கிறது Zazu கதாபாத்திரத்திற்கான மனோபாலாவின் குரல். பறவையாகவே அவரைக் கற்பனை செய்து சிரிக்க முடிவது கூடுதல் சிறப்பு.
அதேபோல், டிமோனாக ரோபோ சங்கரும், பும்பாவாக சிங்கம்புலியும் சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் குரல்களும் அந்தந்த கதாபாத்திரங்களோடு கச்சிதமாக பொருந்தியிருக்கின்றன. அதேபோல் மதன்கார்க்கியின் ஜாலியான வசனங்களும். இவையே, வழக்கமான டப்பிங் படங்களில் ஏற்படும் சலிப்பை தவிர்த்து ஜாலியாக அந்த உலகிற்குள் உலா வர உதவுகிறது.