தூக்கிலிடுவதை தொழிலாகச் செய்த ஒருவனின் மனநிலையை பேசும் - தி லாஸ்ட் ஹாங் மேன்...!

தூக்கிலிடுவதை தொழிலாகச் செய்த ஒருவனின் மனநிலையை பேசும் - தி லாஸ்ட் ஹாங் மேன்...!
தூக்கிலிடுவதை தொழிலாகச் செய்த ஒருவனின் மனநிலையை பேசும் - தி லாஸ்ட் ஹாங் மேன்...!

கொலைகள் எல்லாம் ஒரே மாதிரியான மனநிலையில் நிகழ்வது இல்லை, கோபத்தில் நிகழ்த்துவது, திட்டமிட்ட படுகொலை, கூலிக்கு செய்வது என வகைப்படுத்தலாம். அதற்கான தண்டனையும் அப்படித்தான் இந்தியாவை பொருத்தமட்டில். திட்டமிட்ட கொடூர படுகொலைகளுக்கு மரணதண்டனை வழங்கப்படுகிறது. அதில் திட்டத்தின் ஆழம், கொலையின் நோக்கம், கொலை செய்யப்பட்ட முறை எல்லாம் கூட கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

மரண தண்டனை மீதான விவாதங்கள் நமக்கு புதிதல்ல என்றாலும் கூட ’ஹாங்மேன்’ எனப்படும் தூக்கிலிடுகிறவனின் மனநிலை என்னவாக இருக்கும் என்பது பற்றி பெரிய பதிவுகள் நம்மிடம் இல்லை, இரா.முருகவேல் மொழிபெயர்த்த ’தூக்கிலிடுபவனின் நாட்குறிப்புகள்’ சி.ஏ.பாலன் எழுதிய ‘தூக்குமர நிழலில்’ போன்ற புத்தகங்கள் மரணதண்டனை கைதிகள் மற்றும் தூக்கிலிடுகிறவர்களின் மனஓட்டத்தை ஓரளவு பேசியிருக்கிறது.

2005-ஆம் ஆண்டு வெளிவந்த ’பியர்பாயிண்ட் : தி லாஸ்ட் ஹாங் மேன்’ என்ற ஆங்கிலத் திரைப்படம் அரச கைதிகளை தூக்கிலிடுவதை தொழிலாக செய்த ‘ஆல்பர்ட் பியர் பாயிண்ட்’ என்ற மனிதனின் வாழ்க்கையை பேசுகிறது.

’பியர்பாயிண்ட் : தி லாஸ்ட் ஹாங் மேன்’ (2005)

1905-ஆம் வருடம் இங்கிலாந்தில் பிறந்தவர் ‘ஆல்பர்ட் பியர் பாயிண்ட்’. இங்கிலாந்து அரசின் சிறைகளில் இருந்த கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற இவர் போன்றவர்கள் பயன்படுத்தப்பட்டனர். ’ஆல்பர்ட் பியர் பாயிண்ட்’ன் தந்தையும் இதையே தனது பணியாக செய்தவர்.

இந்நிலையில் இங்கிலாந்து சிறைத்துறை ‘பியர் பாயிண்ட்’ஐ அழைத்து அவனுக்கு தூக்கிலிடும் முறைபற்றி பயிற்சி தருகிறது. எளிதில் அந்த நுணுக்கங்களை புரிந்து கொள்ளும் அவன்., ஒரு கைதியை பார்த்தவுடனேயே அவனது உடலுக்கு எத்தனை தடிமனான கயிறு தேவை அதன் நீளம் என்னவாக இருக்கவேண்டும் என துல்லியமாக கணக்கிட்டு தண்டனையினை நிறைவேற்றியும் விடுவான். அவனை பொருத்தவரை அது அவனுக்கு வழங்கப்பட்ட வேலை. இதில் குற்ற உணர்வோ பட்சாதாபமோ அவனுக்கு கிடையாது. அவனுக்கு துணையாக ’டிஸ்’ என்ற உதவியாளனும் இருக்கிறான். கதையின் திருப்புமுனையே அவனிடம் தான் உள்ளது என்பதை பிறகு வரும் காட்சிகள் தெளிவுபடுத்தும். ’டிஸ்’ அவனது நெருங்கிய நண்பனும் கூட.

‘பியர் பாயிண்ட்’ன் மனைவி ’ஏணி’க்கும் கணவர் செய்யும் தொழில் பற்றி விமர்சனங்கள் கிடையாது. குறுகிய நேர அளவில் ஒருவனை தூக்கிலிட்டுக் கொல்வதில் வல்லவன் என்ற பெயரை பெறுகிறான் ‘ஆல்பர்ட் பியர்பாயிண்ட்’. அவன் 7.5 நொடிகளில் ஒரு உயிரை தூக்கிலிட்டு கொன்றதன் மூலம் மேல் அதிகாரிகளிடன் கவனம் பெறுகிறான்.

இது பற்றி நாஜிகளின் ஜெர்மனிக்கு தெரியவர ‘ஆல்பர்ட்’ ஜெர்மனுக்கு அனுப்பப்படுகிறான். அங்கு 47 கைதிகளை தூக்கிலிடும் வேலை அவனுக்கு தரப்படுகிறது. அதற்கு அதிகப்பட்சமாக ஒருவாரம் மட்டுமே கால அவகாசம். ஒரு நாளைக்கு 13 பேர் வீதம் கைதிகளை கொன்றுவிட்டு இங்கிலாந்து திரும்புகிறான் ஆல்பர்ட். பிறகு அவனது மனைவியுடன் சேர்ந்து ஒரு மதுவிடுதியை துவங்குகிறான். இரகசியமாக செய்யும் இந்த வேலை அவனது வேகம் மற்றும் துல்லியத் தன்மையால் பத்திரிகை செய்தியாக வருகிறது அவன் உள்ளூர் பிரபலம் ஆகிறான். ஆனால் அது அவனது செயல்பாடுகளுக்கு இடையூராக உள்ளது.

ஒரு காட்சியில் கைதியொருவனை தூக்கிலிடுவதற்கு முன் சாகப் போகிறவனின் தாய் வந்து ‘பியர் பாயிண்ட்’டிடம் இதை செய்ய வேண்டாம் என சொல்லி அழுகிறாள். ஈரமில்லா நெஞ்சம் கொண்ட அவனது கைகள் நடுங்குகிறது. ஆனாலும் அவன் தொடர்ந்து பலரை தூக்கிலேற்றுகிறான்.

இதற்காக மரண தண்டனைக்கு எதிராக போராடும் சிந்தனையாளர்களின் கோபத்துக்கும் ஆளாகிறான், ஒரு கட்டத்தில் தனது நண்பன் ‘டிஸ்’ கொலை குற்றவாளியாக கைது செய்யப்பட்டு அவனை தூக்கிலிடும் பொறுப்பும் ‘ஆல்பர்ட் பியர்பாண்ட்’டிடம் கொடுக்கப்படுகிறது. அதுவரை எலிகளை கொலை செய்வதை போல தூக்கு தண்டனை நிறைவேற்றி வந்தவன் தனது நண்பனை தனது கையால் தூக்கிலிடும் போது நடுங்கிப் போகிறான்.காலம் கண்ணாடி போல் அவன் முன் நின்று சிரிக்கிறது. சாவதற்கு முன் பார்த்த நண்பனின் கண்கள் பியர்பாயிண்ட்டை உறங்கவிடவில்லை. அதிகமாக மது அருந்துகிறான். பலரது எதிர்ப்பு, நண்பனையே கொலை செய்ய வேண்டிய நிலை இவை எல்லாம் அவனை இனி இந்த வேலையை செய்யக் கூடாது என்ற சிந்தனை நோக்கி நகர்த்துகிறது. அவன் இராஜினாமா கடிதம் எழுதுகிறான்.

1933 முதல் 1955 வரையிலான காலகட்டத்துக்குள் ’ஹாங்மேன்’ ’ஆல்பர்ட் பியர்பாயிண்ட்’ 608 பேரின் மரண தண்டனையை நிறைவேற்றியிருக்கிறான். அவன் தனது வேலையை இராஜினாமா செய்தபிறகு “நான் சொல்கிறேன் எனது அனுபவத்தில் தூக்குதண்டனை பழிவாங்கும் உணர்சியைத் தான் மனிதர்களிடத்தில் வளர்த்ததே தவிர அதனால் எந்த நன்மையும் இல்லை” என எழுதினான். ‘ஆல்பர்ட் ஹாங்மேன்’ எனும் பரிதாபத்துக்குரிய மனிதனை அவனது 87-வது வயதில் இயற்கை அழைத்துக் கொண்டது.

இப்படத்தின் இயக்குனர் ’அட்ரியன் ஷர்ஹோல்ட்’ 1997-ல் இவர் இயக்கிய ’ஹோல்ட் ஆன்’ திரைப்படம் இவருக்கு நல்ல அடையாளத்தை தந்தது. படத்தின் ஒளிப்பதிவாளர் ’டேனி ச்சோன்’ சமூக அறிவியலை தனது விருப்பப் பாடமாக எடுத்து படித்திருந்தாலும் தனது தொடர் புகைப்படக்கலை பயிற்சி மற்றும் ஆர்வத்தால் ஒளிப்பதிவாளரானவர்.

2007 BAFTA திரைப்படவிழா, டினார்ட் பிரிட்டீஸ் பிலிம் பெஸ்டிவல் 2006, லண்டன் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் பிலிம் விருது உள்ளிட்ட பல சர்வதேச திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்ட இப்படம் ’சில்வர் ஹிட்ச்காக்’ விருதையும் வென்றது.

608 பேரை தனக்கு வழங்கப்பட்ட கடமையென நினைத்து தூக்கிலிட்டவனை நண்பனின் மரணம் நிலைகுழையச் செய்தது என்றால், அந்த அன்பு தான் மனிதனின் இயற்கை குணம். அது எடையற்ற மயில் இறகைப் போல வண்ண தோகையால் நம்மை வீழ்த்திவிடுகிறது. மரணதண்டனை நிறைவேற்றப் பட்ட பிறகு இறந்தவர் நிரபராதி என தெரியவந்த வழக்குகள் பல உண்டு. அப்படி உயிரிழந்த அப்பாவிகளுக்கெல்லாம் நம்மிடம் என்ன பதில் இருக்கிறது...? நீங்கள் மனிதர்களை நோக்கி மரண வலையினை வீசாமல் அன்பின் அலையினை செலுத்துங்கள். எல்லா படகும் கரை சேரட்டும். மரணம் என்பது அரசாங்கம் கொடுக்கும் தண்டனை அல்ல செய்யும் குற்றம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com