\
jana nayagan
jana nayaganweb

'7 மாத போராட்டம்..' தளபதியாக விஜயின் கடைசி ஆட்டம்! ‘ஜனநாயகன்’… கடந்து வந்த பாதை!

7 மாத போராட்டத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் கடைசித் திரைப்படமாக உருவாகியிருக்கும் ஜனநாயகன் படம் நாளை திரையரங்கில் வெளியாகவிருக்கிறது.
Published on
Summary

தமிழக முதலமைச்சரும் TVK தலைவருமான விஜயின் கடைசி தளபதி படமாக கருதப்படும் ‘ஜனநாயகன்’ ஏழு மாத சென்சார் போராட்டம், சட்ட-அரசியல் சிக்கல்கள், தேர்தல் நடத்தை விதிமுறைகள், காட்சி கசிவு போன்ற தடைகளை தாண்டி ஜூலை 23, 2026 அன்று உலகமெங்கும் வெளியீடாகிறது. A சான்றிதழ் பெற்ற இந்த படம், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

தமிழக முதல்வரும், TVK தலைவருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் ஜூலை 23-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த ஒரு அறிவிப்பே தற்போது தமிழ் சினிமாவின் கவனத்தை முழுமையாக ஈர்த்துள்ளது. இந்த ரிலீஸுக்குப் பின்னால் கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் நீண்ட சென்சார் போராட்டமும், பல்வேறு சட்ட மற்றும் அரசியல் சவால்களும் நிறைந்திருக்கிறது.

Jana Nayagan
Jana Nayagan

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகும் இந்த ஜனநாயகன் கடந்து வந்த பாதை குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்..

மேடையில் உணர்ச்சிவசப்பட்ட விஜய்..

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான GOAT படத்திற்குப் பிறகு, விஜயின் 69-வது படத்தை இயக்குநர் H. வினோத் இயக்க, KVN Productions தயாரிக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக 2024 செப்டம்பரில் அறிவிக்கப்பட்டது. தாற்காலிகமாக படத்திற்கு தளபதி-69 என்றும் பெயரிடப்பட்டது.

அக்டோபர் 2024ல் பூஜா ஹெக்தே, மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளத்துடன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக துவங்கியது.

ஜனவரி 2025ல் படத்திற்கு அதிகாரபூர்வமாக ஜனநாயகன் என தலைப்பிடப்பட்டது. படத்தின் அறிவிப்பு வெளியானபோதே 2026 பொங்கலுக்கு படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது,. அதன் பிறகு தொடர்ந்து நடைபெற்று வந்த படப்பிடிப்பு அக்டோபர் 2025ல் நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்தது.

படத்தின் போஸ்ட் ப்ரோடக்டின் பணிகள் முடிவுற்று 2025 டிசம்பரில் மலேசியாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் முன்னிலையில் ஆடியோ வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

நடிகர் விஜய் தனது திரை பயணத்ததை முடித்து முழுவதுமாக அரசியலில் ஈடுபட போகிறார் என்ற பேச்சுகளால் இந்தநிகழ்வு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதிக மக்கள் கலந்துக்கொண்ட இசை வெளியிட்டு விழா என்று இந்த நிகழ்வு லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்தது.

இந்த நிகழ்வின் போது நடிகர் விஜய், “என் ரசிகர்களுக்காக சினிமாவையே விட்டுக்கொடுக்கிறேன்” என்று உணர்ச்சிபூர்வமாக பேசியது ரசிகர்களை நெகிழ வைத்தது.

அதிகரித்த சிக்கல்கள்..

பொங்கல் வெளியீட்டை இலக்காகக் கொண்டு, 2025 டிசம்பர் 18-ஆம் தேதி படம் சென்சார் குழுவுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், படத்தில் இடம்பெற்றிருந்த சில காட்சிகளுக்கு CBFC ஆட்சேபம் தெரிவித்ததால் சான்றிதழ் வழங்கப்படவில்லை.

இதையடுத்து, 2026 ஜனவரி 6-ஆம் தேதி தயாரிப்புத் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது. தனி நீதிபதி U/A சான்றிதழ் வழங்க உத்தரவிட்டாலும், CBFC மேல்முறையீடு செய்து இடைக்கால தடை பெற்றதால், ஜனவரி 9-ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டிருந்த பொங்கல் ரிலீஸ் கைவிடப்பட்டது. வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றும் சாதகமான தீர்வு கிடைக்காததால், பிப்ரவரி 10-ஆம் தேதி வழக்கு வாபஸ் பெறப்பட்டு, படம் Revising Committee-க்கு அனுப்பப்பட்டது.

அதே சமயத்தில், 2026 மார்ச் மாதத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் (Model Code of Conduct) அமலுக்கு வந்ததால் படம் வெளியாவதில் புதிய சிக்கல் உருவானது. TVK தலைவரான விஜயின் படம் என்பதால், வெளியீட்டுக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி தேவை என்று சென்சார் வாரியம் கூடுதல் நிபந்தனை விதித்ததாக கூறப்பட்டது. இதனால் படம் மீண்டும் முடங்கியது.

இந்த பரபரப்பான சூழலில், ஏப்ரல் 9-ஆம் தேதி படத்தின் சில காட்சிகள் இணையத்தில் கசிந்தது படக்குழுவுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் ஜனநாயகன் படதை பதிவிறக்கம் செய்தாலோ பார்த்தாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் நடைபெற்ற தேர்தலில் விஜய் வெற்றி பெற்று, தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்.

இறுதியாக, 2026 ஜூலையில் அனைத்து சென்சார் பிரச்சினைகளும் முடிவுக்கு வந்தன. சில காட்சிகள் மற்றும் வசனங்கள் நீக்கப்பட்ட பிறகு, படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டது. விஜயின் திரைப்பயணத்தில் ‘பகவதி’ படத்திற்குப் பிறகு, சுமார் 24 ஆண்டுகள் கழித்து A சான்றிதழ் பெற்ற இரண்டாவது படம் இதுவாகும். இதனால், 18 வயதிற்குக் குறைவானவர்கள் பெற்றோருடன் வந்தாலும் திரையரங்கில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

படத்தின் வெளியீட்டு தேதியிலும் பல முறை மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆரம்பத்தில் ஜூலை 16-ஆம் தேதி பிரீமியர் ஷோ நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கிறிஸ்டோபர் நோலனின் The Odyssey திரைப்படம் ஜூலை 17-ஆம் தேதி வெளியாக இருந்ததால், திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என கருதி, இறுதியாக ஜூலை 23, 2026 வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டது.

“ மாண்பு மிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்” என்ற முழக்கத்தோடு திரைப்படம் வெளியாவதால் ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.

பெரும் ரதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகும் ஜனநாயகன் வசூலில் சாதனை படைக்குமா என்பது இன்னும் சில தினங்களில் தெரிய வரும்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com