பூஜையுடன் தொடங்கியது 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' தமிழ் ரீமேக்!
'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தின் தமிழ் ரீமேக் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது
சமீத்தில் கருத்தியல் ரீதியில் தமிழ்ப் பரப்பிலும் அதிகம் விவாதிக்கப்பட்ட மலையாள படம், 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'. இயக்குநர் ஜோ பேபி இயக்கிய இந்த சினிமா Neestream தளத்தில் வெளியானது. சலு கே தாமஸ் ஒளிப்பதிவு ,சூரஜ் வெஞ்சரமுடு, நிமிஷா சஜயன் ஆகியோரின் யதார்த்த நடிப்பு இப்படத்திற்கு கூடுதல் பலம். இந்தியாவைப் பொருத்தமட்டில் குடும்பம் என்கிற அமைப்பு எப்படி ஒரு பெண்ணின் உழைப்பை சுரண்டுகிறது என்பது குறித்தும், இந்தியப் பெண்களின் வாழ்வியல் சிக்கலையும் மிக அழுத்தமாக பதிவு செய்தது 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'.
இந்நிலையில் அப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளதாகவும், இயக்குநர் கண்ணன் இப்படத்தை இயக்குவார் என்றும் அதிகாரபூர்வமாக தகவல் வெளியானது. தியேட்டர் ரிலீஸ்க்கு ஏற்ப கதையில் மாற்றம் செய்யப்பட்டு இப்படம் உருவாகும் என்றும், இரண்டு மொழிகளிலும் பரிட்சயமான நடிகர்கள் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' ரீமேக் படத்தில் நடிப்பார்கள் எனவும் தகவல் வெளியானது.
அதன்படி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ் ரீமேக்கின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. அது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் பகிரப்பட்டுள்ளன.