ராணா டகுபதி நடிப்பில் வெளியாகவுள்ள காஸி படத்துக்கு தமிழில் சூர்யாவும், தெலுங்கில் சிரஞ்சீவியும் குரல் கொடுக்க உள்ளனர்.
கடந்த 1971ம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரின்போது மூழ்கடிக்கப்பட்ட பிஎன்எஸ் காஸி நீர்மூழ்கிக் கப்பலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள காஸி படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வரும் பிப்ரவரி 17ம் தேதி வெளியாகிறது. படத்தின் முக்கியமான பகுதிகளை விளக்கும் காட்சிகளுக்கு பின்னணி குரலினை தமிழில் சூர்யாவும், தெலுங்கில் சிரஞ்சீவியும் கொடுக்க உள்ளனர். இந்தியில் கரண் ஜோஹர் வெளியிடும் காஸி அட்டாக் படத்துக்கு, அமிதாப் பச்சன் குரல் கொடுத்துள்ளார். இளம் இயக்குனர் சங்கல்ப் இயக்கியுள்ள காஸி படம் நீர்மூழ்கிக் கப்பலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் என்றவகையில் கவனம் ஈர்க்கிறது. ராணாவுடன் இந்த படத்தில் டாப்ஸி, மறைந்த இந்தி நடிகர் ஓம்புரி, நாசர், கே.கே.மேனன் அதுல் குல்கர்னி ஆகியோர் நடித்துள்ளனர்.