16 கேமரா கொண்டு படமாகும் மலாலாவின் வாழ்க்கை!

16 கேமரா கொண்டு படமாகும் மலாலாவின் வாழ்க்கை!
16 கேமரா கொண்டு படமாகும் மலாலாவின் வாழ்க்கை!

மலாலாவின் வாழ்க்கை வரலாறு சினிமாவாகிறது. முழுப்படத்தையும் 16 கேமரா கொண்டு படமாக்கியதாக அதன் இயக்குனர் தெரிவித் துள்ளார். 

பாகிஸ்தானில் கடந்த 2012ம் ஆண்டில் பள்ளிக் கூட பஸ்சில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார் சிறுமி மலாலா. அந்தப் பேருந்தை நடு வழியில் நிறுத்திய தலீபான் தீவிரவாதிகள் மலாலா மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பினர். பெண் கல்வியை வலியுறுத்தி பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தீவிரவாதிகள் இத்தாக்குதலை நடத்தினர்.

இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்த மலாலா உயிர் தப்பினார். லண்டனுக்குக் கொண்டு செல்லப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் குணமடைந்தார். கடந்த 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. இளம் வயதிலேயே இந்த விருதை பெற்றவர் மலாலா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ’குல் மக்காய்’ (Gul Makai) என்ற பெயரில் மலாலாவின் வாழ்க்கை வரலாறு சினிமாவாகி வருகிறது. தனது 11 வயதில் இந்த பெயரில்தான் மலாலா, கல்வியை வலியுறுத்தியும் தலிபான்களுக்கு எதிராகவும் பிளாக்கில் எழுதி வந்துள்ளார். அதனால் அந்தப் பெயரையே படத்துக்கு டைட்டிலாக வைத்துள்ளனர். இந்தியில் உருவாகும் இந்தப் படத்தை அம்ஜத் கான் இயக்குகிறார். இதில். அதுல் குல்கர்னி, திவ்யா தத்தா, முகேஷ் ரிஷி, அபிமன்யூ சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். மலாலாவாக குழந்தை நட்சத்திரம் ரீம் சேக் (Reem Shaikh) நடிக்கிறார்.

(அம்ஜத் கான்)

‘முழுப் படத்தையும் 16 கேமரா கொண்டு படமாக்கியுள்ளோம். பல காட்சிகள் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக நீண்ட காட்சிகளாக எடுத்துள்ளோம். எனக்கு கட் ஷாட்டுகள் மீது அதிக நம்பிக்கை இல்லை. அதனால்தான் இத்தனை கேமராவை பயன்படுத்தி இருக்கிறோம். மலாலாவின் வீடு, படித்த பள்ளி ஆகியவற்றை தத்ரூபமாக உருவாக்கி படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். முக்கியமான காட்சிகள் காஷ்மீரில் எடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. முதல் நாள் வசூல் தொகை, மலாலா நிதிக்காக வழங்கப்பட இருக்கிறது’ என்றார் இயக்குனர் அம்ஜத் கான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com