தியேட்டர்களை எப்போது திறக்கலாம்?: திரையரங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சு
நாடெங்கும் உள்ள திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து அவற்றின் உரிமையாளர்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்த உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவு நடத்தும் இந்த ஆலோசனை கூட்டம் காணொலி முறையில் நடைபெற உள்ளது. முதலில், வட மாநில திரையரங்குகளின் பிரதிநிதிகளுக்கு இக்கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் தென்னிந்திய திரையரங்க பிரதிநிதிகளுக்கு மட்டும் அழைப்பு எதுவும் வரவில்லை. இது சர்ச்சையை கிளப்பிய நிலையில் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தென்னிந்திய பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் திரையரங்குகளை எப்போது திறப்பது என்ற முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. கொரோனா பொது முடக்கத்தால் கடந்த ஐந்தரை மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் திரைத்துறை பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. உரிய கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளை மீண்டும் திறக்க அனுமதிக்குமாறு திரையரங்க உரிமையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.