தாதாசாகேப் பால்கே விருது... ஆண்களால் ஆண்களுக்காக வழங்கப்படும் விருதா? - ஒரு பார்வை

தாதாசாகேப் பால்கே விருது... ஆண்களால் ஆண்களுக்காக வழங்கப்படும் விருதா? - ஒரு பார்வை
தாதாசாகேப் பால்கே விருது... ஆண்களால் ஆண்களுக்காக வழங்கப்படும் விருதா? - ஒரு பார்வை

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. இந்திய திரைத்துறையில் மிகவும் உயரிய கௌரவமான விருது என கருதப்படும் இந்த விருது தகுதியான மனிதர் ரஜினிகாந்த். இதில், யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது உண்மைதான். ஏனென்றால் 4 தசாப்தங்களாக இந்திய சினிமா ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் ரஜினி. இப்போது அது பிரச்னையில்லை.

இந்த விருதுகளை பெற்றவர்களின் கடந்த கால பட்டியல்தான் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் கொடுக்கிறது. எதற்காக என்று கேட்கிறீர்களா... இந்திய சினிமா நட்சத்திரங்கள் பெறக்கூடிய இந்த உயரிய விருதை பெண் ஒருவர் வாங்கி 21 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆம், இந்தப் பெரிய இடைவெளிதான் தற்போது கேள்வியாக எழுந்திருக்கிறது.

இதுவரை எத்தனை பெண்கள் வாங்கியிருக்கிறார்கள்?

1969-ம் ஆண்டு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. அப்போது முதல்முறையாக இந்த விருதை வாங்கியவர் ஒரு பெண்தான். தேவிகா ராணி எனப்படும் அவர், இந்திய சினிமா உலகின் ஜாம்பவான் என புகழப்படக் கூடியவர். இவருக்குப் பின் அடுத்தடுத்த இரண்டு தசாப்தங்களில் நான்கு பெண்கள் பெருமைக்குரிய இந்த விருதை கையிலேந்தியுள்ளனர். இந்த நான்கு பேரில் இந்தி, மராத்தி மொழியையைச் சேர்ந்தவர்கள் மூன்று பேர். ஒரே ஒருவர் வங்காளப் பெண்.

கடைசியாக 2000-ம் ஆண்டு ஆஷா போஸ்லே விருதை வாங்கினார். அதன்பின் கடந்த 30 ஆண்டுகளில் எந்தப் பெண் கலைஞர்களுக்கும் இந்த விருது வழங்கப்படவில்லை என்பது கவலை தரக்கூடிய செய்தி. இதனால் கடந்த 30 ஆண்டுகளில் ஒரு பெண் கலைஞர் கூட இந்த விருது பெற தகுதியாக இல்லையா என்ற கேள்வியும், தாதாசாகேப் பால்கே விருது என்றாலே ஆண்களால் ஆண்களுக்கு வழங்கப்படும் விருது எனப் பேசப்படும் அளவுக்கு விமர்சனங்களும் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த விமர்சனங்களுக்கு மற்றுமொரு காரணம், எந்த அடிப்படையில் இந்த விருது பெறுபவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது சினிமா துறையில் இருக்கும் பலருக்கும்கூட புரியாத புதிர்தான். கேட்டால், இந்திய சினிமாவுக்கு சிறந்த பங்களிப்பை கொடுப்பவர்களுக்கு இந்த விருது கொடுத்து கௌரவிக்கப்படுகிறது என்று பதில் வருகிறது. அப்படிப் பார்த்தால் கடந்த பல தசாப்தங்களில் பல பெண் கலைஞர்கள் இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள். அவர்களின் பட்டியல் மட்டுமே அவ்வளவு இருக்கிறது. அப்படிப் பார்த்தால் இது திட்டமிட்ட புறக்கணிப்பாகத்தான் எண்ணத் தோன்றும்.

மிகவும் நுட்பமாக வளர்ந்துவிட்ட இந்தியா சினிமாவில் தற்போது பெண்களின் பிரதிநித்துவம் என்பது பிரதானமாக பேசப்படும் ஒரு கருத்து. பிரபலமான, செல்வாக்கு மிகுந்த பெண் கலைஞர்கள், ஆண் கலைஞர்களுக்கு நிகராக ஊதியம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள், மேலும், இந்தத் துறையில் பெண்களுக்கு எதிராக பாலியல் கொடுமைகள், #METOO இயக்கம் போன்றவை இந்தக் கருத்துக்கு வலுசேர்க்கிறது.

ஆனால், ஆர்மாக்ஸ் மீடியா அண்ட் ஃபிலிம் கம்பானியன் (Ormax Media and Film Companion) வெளியிட்ட சமீபத்திய ஆய்வறிக்கை, இந்திய சினிமாவில் பெண்களுக்கான முக்கியத்துவம் குறைந்துவருவதாக குறிப்பிடுகிறது. இந்த அறிக்கையானது இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 2019-20 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த 129 படங்களின் பகுப்பாய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்டுளள்து. இதில் முக்கிய துறைகளில் பெண்களுக்கான இடம் என்பது பூஜ்ஜியமாகவே இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

இந்தி சினிமாவின் முக்கிய துறைகளின் தலைமைகளில் 84% பேர் ஆண்கள். அதுவே தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரை 99% ஆண்கள்தான். இதேபோல் ஒட்டுமொத்த இந்தியா சினிமாவில் வெறும் 2 சதவீதம் மட்டுமே பெண் ஒளிப்பதிவாளர்கள். இந்த தரவுகள் போதும். சினிமா துறையில் பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதற்கு.

இதனால் சினிமா துறையில் விருதும் பெண்களுக்கு மறுக்கப்படுவதில் ஆச்சரியம் எதுவும் வந்துவிட போவதில்லை. இதுவரை தாதாசாகேப் பால்கே விருதை 45 ஆண்கள் பெற்றுள்ளனர். இந்த 45 ஆண் கலைஞர்களும் விருதுக்கு தகுதியானவர்களா என்பதை பேசுவதை விட, இவர்கள் பெற்ற காலத்தில் தகுதியான பெண் திரைக்கலைஞர்களுக்கு விருது மறுக்கப்பட்டிருப்பது வேதனை அளிக்க கூடிய செய்தி.

வஹீதா ரஹ்மான், மறைந்த நடிகை சுசித்ரா சென், பாத்மா பேகத், மறைந்த நடிகைகள் பானு ஆதையா, வைஜெயந்தி மாலா, சாய் பாரஞ்ச்பை போன்ற திறமையான பெண் கலைஞர்கள் இந்தியா சினிமாவுக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்தவர்கள். இவர்கள் யாரும் விருதை தேர்வு செய்யும் தேர்வாளர்கள் கண்களில்படவில்லையா அல்லது இவர்களின் கலை உணர்வு தேர்வாளர்களுக்கு புரியவில்லையா?

1913 காலகட்டமானது பெண்கள் சமையலறைக்கென ஒதுக்கப்பட்ட காலகட்டம். அப்போது நடிப்புத் தொழில் என்பது மதிப்பில்லாத தொழிலாகவும், அதுவும் பெண்கள் அதில் நுழையக்கூடாது என்றும் கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால் அந்தக் காலகட்டத்திலேயே இந்தியாவின் மகத்தான திரைப் படைப்பாளி தாதாசாகேப் பால்கே தனது 'பாஸ்மசூர்' படத்தில் மோகினி கமலாபாய் கோகலே என்ற பெண் கலைஞரை முதன்மைக் கதாபாத்திரமாக அறிமுகப்படுத்தினார்.

அதுவரை நாடகம் மற்றும் திரைப்படங்கள் என அனைத்திலும் பெண் வேடங்களில் ஆண் கலைஞர்களே நடித்து வந்தனர். அவற்றை எல்லாம் கமலாபாயை அறிமுகப்படுத்தி உடைத்தெறிந்தார் தாதாசாகேப். அப்படிப்பட்டவர் பெயரால் வழங்கப்படும் இந்த விருதானது தொடர்ந்து பெண்களுக்கு மறுக்கப்பட்டு வருவது கூடுதல் சோகத்துக்குரியது.

(பத்திரிகையாளரும், 'பர்வீன் பாபி: எ லைஃப்' நூலாசிரியருமான கரிஷ்மா உபாத்யாய் The Quint தளத்தில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது.)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com