ஒளிபரப்பு சட்ட திருத்த வரைவு மசோதாவில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? ஏன் எதிர்க்கிறார்கள்?
மத்திய அரசின் ஒளிபரப்பு சட்ட திருத்த வரைவு மசோதாவுக்கு திரையுலகினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த மசோதாவில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? இதனை ஏன் எதிர்க்கிறார்கள் விரிவாக அலசலாம்.
ஒளிபரப்பு சட்ட திருத்த வரைவு மசோதா கடந்த 18-ம் தேதி வெளியிடப்பட்டதில் இருந்தே இந்தியா முழுக்க உள்ள பல திரைக் கலைஞர்கள் தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். அந்தவகையில், இயக்குநர் வெற்றிமாறன், அனுராக் காஷ்யப், நந்திதா தாஸ், பர்ஹான் அக்தர் உள்ளிட்ட 1400 கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதினர். அதில், ஏற்கனவே, கலைஞர்கள் பல்வேறு அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் சூழலில், இந்த புதிய சட்ட திருத்த வரைவு அதனை இன்னும் வலுவாக்கும் என குறிப்பிட்டிருந்தனர். மேலும், தணிக்கை சான்றிதழ் தொடர்பாக முடிவெடுக்கும் உச்ச அதிகாரம் மத்திய அரசுக்கு இருப்பது, கருத்து சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்கும் செயல் எனவும் அவர்கள் கண்டித்திருந்தனர்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் சினிமா, ஊடகம், கல்வி ஆகிய மூன்றும் இந்தியாவில் பலரும் அறிந்த மூன்று குரங்குகளாக மட்டுமே இருக்க முடியாது எனவும், அதனால், வரவிருக்கும் தீமைக்கு எதிராக குரல் கொடுப்பதே ஜனநாயகத்தை காக்கும் சிறந்த மருந்தாக இருக்கும் எனவும் குறிப்பிட்டு புதிய ஒளிபரப்பு சட்ட திருத்த வரைவிற்கு எதிரான தன் நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார். பு
திய திருத்த வரைவிற்கு எதிராக குரல் கொடுக்கும் கலைஞர்கள், தணிக்கை சான்றிதழில் மத்திய அரசுக்கு உண்டான அதிகாரத்தை திரும்பப் பெறுவதையும், அண்மையில் கலைக்கப்பட்ட திரைப்பட தணிக்கை வாரியத்தை மீண்டும் நிறுவுவதையும் பிரதான கோரிக்கையாக முன்வைக்கின்றனர். ஜூலை 2-ம் தேதி வரை புதிய சட்ட திருத்த வரைவின் மீதான கருத்துகள் கேட்கப்பட்டு வரும் நிலையில், கலைஞர்களின் எதிர்ப்பு குரல்களுக்கு செவிசாய்த்து மத்திய அரசு திருத்தங்களை மேற்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
ஒளிபரப்பு சட்ட திருத்த வரைவு மசோதா தொடர்பாக புதிய தலைமுறையின் 360 டிகிரி விவாத நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை இந்த வீடியோ தொகுப்பில் பார்க்கலாம்.