காற்றை வசப்படுத்திய வில்லியம் கம்க்வாம்பா...! ‘THE BOY WHO HARNESSED THE WIND’

காற்றை வசப்படுத்திய வில்லியம் கம்க்வாம்பா...! ‘THE BOY WHO HARNESSED THE WIND’
காற்றை வசப்படுத்திய வில்லியம் கம்க்வாம்பா...! ‘THE BOY WHO HARNESSED THE WIND’

தென்கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்று தான் மாலாவி., பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய இந்நாட்டில் 50 சதவிதத்திற்கும் அதிகமானோர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். அதிலும் 25% பேர் மிகவும் மோசமான பொருளாதார நிலையில் உள்ளனர். மாலாவியின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த வில்லியம் கம்க்வாம்பா என்ற சிறுவன் தனது புத்திசாலித்தனமான முயற்சியால் எப்படி தனது கிராமத்தை வறுமையின் பிடியிலிருந்து மீட்டான் என்ற உண்மைக் கதை தான் கடந்த ஆண்டு வெளியான 'the boy who harnessed the wind' என்ற திரைப்படம்.

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல நடிகரும் இயக்குநருமான Chiwetel Ejiofor இயக்கி நடித்திருக்கும் இத்திரைப்படம் தற்போது நெட்பிளிக்ஸில் வைரலாகியிருக்கிறது. வில்லியம் கம்க்வாம்பா என்ற 13 வயது சிறுவன் மாலாவியில் உள்ள தனது கிராமத்தில் வசிக்கிறான். அவனது தாய் தந்தை மற்றும் சகோதரியுடன் வாழும் அவனுக்கு பள்ளிக் கூடம் போவதும் பாடம் படிப்பதும் ரொம்பவே பிடித்த விசயம். வறுமையின் கோர பிடியில் சிக்கியிருந்தாலும் அவனது தாயும் தந்தையும் அவனது படிப்பை ஊக்குவித்தனர். தாங்கள் கஷ்டப்பட்டாலும் வில்லியம் தொடர்ந்து பள்ளிக்குப் போக அவர்கள் ஊக்கப்படுத்தினர். என்றாலும் ஒரு கட்டத்தில் பெற்றோரால் வில்லியமின் பள்ளிக் கட்டணத்தை கட்ட முடியவில்லை. அவனது பள்ளிப் படிப்பு பாதியில் நின்று போகிறது.

வில்லியம் பகலில் தனது தந்தைக்கு உதவியாக வயல் வேலை செய்தாலும் அவனது எண்ணம் முழுக்க அவனது பள்ளி நூலகத்தை சுற்றியே இருந்தது. எப்படியோ கெஞ்சி அவன் தனது பள்ளி நூலகத்திற்குள் பிரவேசிக்கும் அனுமதியை பெறுகிறான். அங்கு அவனுக்கு “using energy” என்ற புத்தகம் கிடைக்கிறது. அந்த புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு மின்சார வசதி இல்லாத தனது கிராமத்தில் சிறிய காற்றாலையினை உருவாக்க அவன் முயல்கிறான். அதற்கு முன்பாக அவன் ஒரு விசயத்தை பார்த்து ஆச்சர்யப்பட்டான். வில்லியமின் பள்ளி ஆசிரியர் பயன்படுத்தும் மிதிவண்டியில் இருக்கும் டைனமோ அந்த சைக்கிளின் முகப்பு விளக்கினை எரியச் செய்கிறது. இந்த டைனமோ மின்சார உற்பத்தி அவனுக்கு ஒரு யோசனையினை உருவாக்குகிறது. அதன் படி அவன் ஒரு காற்றலை தயாரிக்க நினைக்கிறான். அதற்கு அவனுடைய அப்பாவின் சைக்கிள் தேவைப் படுகிறது. ஆனால் அவரோ வில்லியம் ஏதோ விளையாட்டு பொம்மை செய்ய நினைக்கிறான் என நினைத்து சைக்கிளை தர மறுக்கிறார்.

வில்லியம் தன் நண்பர்களுடன் சேர்ந்து காற்றாலை உருவாக்கத் தேவையான பொருட்களை சேகரிக்கிறான். ஒரு கட்டத்தில் தன் மகன் மேல் நம்பிக்கை வரவே தனது சைக்கிளை வில்லியமின் ஆராய்ச்சிக்கு தருகிறார் அப்பா Ejiofor. அக்கிராமத்தில் இருக்கும் மரங்கள் உதவியுடன் 32 அடி உயரமுள்ள காற்றாலை தயாராகிறது. வானம் பார்த்த பூமிக்கு நீர் இறைத்துக் கொடுக்க இந்த காற்றலை மின்சாரம் உதவப் போகிறது. ஒரு பெரிய அதிசயத்திற்காக ஊர் மக்கள் வில்லியமின் முன் காத்திருந்தனர். அவன் ஏற்கனவே சேகரித்திருந்த சைக்கிள் டைனமோவை சைக்கிள் மற்றும் விசிறி இறக்கைகளுடன் இணைக்கிறான். காற்று பலமாக வீச விசிறி சுழல்கிறது. மின்சாரம் கிடைக்குமா கிடைக்காத என மக்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். ஒளியின் வேகத்தில் மின்சாரம் உற்பத்தியாகிறது. அங்கிருந்த சிறு கிணற்றிலிருந்த மோட்டரானது தண்ணீரை இறைத்து நிலத்தில் விடுகிறது. மக்கள் கொண்டாட்டத்தில் குதிக்கின்றனர். மின்சார வசதி கூட இல்லாத வானம் பார்த்த பூமியான அந்த கிராமம் உலகச் செய்தியானது.

இப்படியாக வில்லியம் கம்க்வாம்பா ஒரு சாதனையினை நிகழ்த்தினான். 2001’ஆம் ஆண்டு இதனை செய்துகாட்டிய போது வில்லியமின் வயது 13. இந்த செய்தி கொஞ்சம் தாமதமாகவே உலகுக்கு தெரிந்தது. வில்லியமைப் பற்றி அறிந்த TED GLOBAL நிறுவனம் அவரை ஒரு கருத்தரங்கில் பேச அழைத்தது. அதன் மூலம் உலக முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்த வில்லியம் தனது முயற்சியால் தன்னுடைய கிராமம் மட்டுமல்லாமல் தனது அண்டை கிராமங்களுக்கும் மின்சாரத்தை கொண்டு சேர்த்திருக்கிறார். இப்போது அவருக்கு வயது 32. வில்லியம் எழுதிய தனது சுய சரிதையான THE BOY WHO HARNESSED THE WIND என்ற நூலினை அடிப்படையாகக் கொண்டு தான் இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது. இது தவிர ஆப்ரிக்காவில் எயிட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாடகங்களையும் முன்னெடுத்து நடத்திவருகிறார் வில்லியம் கம்க்வாம்பா. இப்படத்தில் வில்லியமின் அப்பாவாக நடித்திருப்பவரும் இத்திரைப்படத்தின் இயக்குநருமான Chiwetel Ejiofor ஒரு அசாத்திய நடிகர் இவரது நடிப்பில் 2013’ல் வெளியான 12 years a slave என்ற சினிமா ஆஸ்கர் விருதைப் பெற்றது. 12 வருடங்கள் அடிமையாக வாழ்ந்த soloman northup என்ற அற்புதமான இசைக் கலைஞனின் வாழ்வை பேசிய அத்திரைப்படத்தை Steve McQueen இயக்கிருந்தார்.

ஆங்கிலம் மற்றும் ஆப்ரிக்காவின் Chewa மொழியில் உருவாகியிருக்கும் ‘THE BOY WHO HARNESSED THE WIND’ என்ற இத்திரைப்படம் NAACP Image விருதினை பெற்றுள்ளது. பிபிசி மற்றும் பிரிடீஷ் பிலிம் இன்ஸ்டிடியூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இத்திரைப்படம், தற்போது நெட்பிளிக்ஸில் கிடைக்கிறது. மாலாவி நிலத்தின் வறுமையினையும் வெக்கையினையும் உலகோர் மனங்களில் உக்கிரமாக கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் Dick pope. சாதனைச் சிறுவன் வில்லியமை அப்படியே திரையில் பிரதி எடுத்திருப்பவர் Maxwell Simba. இது தான் இவரது முதல் முழு நீள திரைப்படம் என்று சொன்னால் யாரும் நம்ப முடியாது., அந்த அளவிற்கு பிரமாதமாக நடித்திருக்கிறார் Maxwell Simba. தான் ஆசையாக வளர்த்த நாய் பசியால் இறந்து போகும் ஒரு காட்சியில் Maxwell Simba’வின் நடிப்பு காண்போரை நெகிழச் செய்துவிடும். மிகையில்லாத பக்குவமான நடிப்பை Maxwell Simba வெளிப்படுத்தி இருப்பது இத்திரைப்படத்திற்கு மிகப் பெரிய பலம். சர்வதேச அளவில் இன்னும் பல்வேறு விருதுகளை ‘THE BOY WHO HARNESSED THE WIND’ திரைப்படம் பெறும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

தனது 13’வது வயதில் காற்றை வசப்படுத்தி கிராமத்தை காப்பாற்றிய வில்லியம் கம்க்வாம்பா., உலக மக்களின் மனதில் நம்பிக்கை மின்சாரத்தை பாய்ச்சியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com