நடிகை பாவனா விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப், மலையாள நடிகர்கள் சங்கமான ’அம்மா’வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கொச்சியில் நடிகை பாவனா காரில் சென்று கொண்டிருந்தபோது கடத்தப்பட்டு பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார். இந்த வழக்கில், அந்த கார் டிரைவர் மார்ட்டின், பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், திடீர் திருப்பமாக, நடிகர் திலீப் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து மலையாள நடிகர் சங்கமான ’அம்மா’வின் (Association of Malayalam Movie Artistes) அவசரக் கூட்டம் கொச்சியிலுள்ள நடிகர் மம்மூட்டி வீட்டில் இன்று காலை நடந்தது. இதில் நடிகர் திலீப்பை சங்கத்தில் இருந்து நீக்க ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. இதை நடிகர் மம்மூட்டி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, ’மலையாள நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து திலீப் நீக்கப்படுகிறார். இந்த சங்கம் பாவனாவுக்கு ஆதரவாக இருக்கும்’ என்றார். மோகன்லால், பிருத்விராஜ், ஆசிப் அலி, தேவன், ரம்யா நம்பீசன் ஆகியோர் உடனிருந்தனர். கேரள திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் கேரள திரைப்பட தொழிலாளர் அமைப்பும் திலீப்பை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.