"பிரியங்கா என்ற கானக் குயில்!" - நெகிழ்ச்சியுடன் மிஷ்கின் பாராட்டு
’பிசாசு 2’ படத்தில் பாடல் பாடியிருக்கும் பிரியங்காவையும், அவரது பெற்றோரையும் பாராட்டி இருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.
மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் 'பிசாசு'. இந்தப் படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து அவர் இயக்கிய 'துப்பறிவாளன்', 'சைக்கோ' படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில், தற்போது 'பிசாசு' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
மிஷ்கின் இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். துணை கதாபாத்திரத்தில் நடிகை பூர்ணா நடிக்கிறார். கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
‘பிசாசு 2’ பட வேலைகள் தொடங்கியுள்ள நிலையில், நேற்று பாடல் பதிவு நடந்துள்ளது என்பதை இயக்குநர் மிஷ்கின் பாடகி பிரியங்காவுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து “இன்று நடந்த பாடல் பதிவில் மேன்மையாக பாடிய பிரியங்காவிற்கு நன்றி. மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்த ஆடியோ இன்ஜினியர் பிஜு ஜேம்ஸுக்கு நன்றி. பிரியங்கா என்ற கான குயிலைப் பெற்றெடுத்த தாய்க்கும் தந்தைக்கும் நன்றி” என்று உற்சாகமுடன் பதிவிட்டு பிரியங்காவை பாராட்டி இருக்கிறார்.
பாடகி பிரியங்கா விஜய் டிவி நடத்திய சூப்பர் ’சிங்கர் சீசன் 2’ வில் கலந்துகொண்டு செமி ஃபைனல்ஸ் வரை முன்னேறினார். அடிக்கடி சமூக வலைதளங்களிலும் மேடைகளிலும், இவர் பாடும் பாடல்கள் வைரல் ஹிட் அடித்தன. இளையராஜா இசையில் ’நாச்சியார்’ படத்திலும் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் ’மாம்’ படத்திலும் பாடியிருக்கிறார் பிரியங்கா என்பது குறிப்பிடதக்கது.