‘டிசம்பர் 12ல் ரஜினி168 படப்பிடிப்பு?’ - ஜோதிகா ஹீரோயினா?
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியாக உள்ள படம் ‘தர்பார்’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று டப்பிங் வேலை சென்று கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்த படத்திற்கு ஆயத்தமாகியுள்ளார்.
அஜீத் நடித்த வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சிவா ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறார் என தயாரிப்பு நிறுவனம் அக்டோபர் 11 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. எந்திரன், பேட்ட படங்களை தொடர்ந்து ரஜினியின் மூன்றாவது படத்தை இந்த நிறுவனம் தயாரிக்கின்றது. இது ரஜினிக்கு இது 168வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்க உள்ளது என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது. அதன்படி ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12 அன்று பூஜையுடன் படத்திற்கான படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக தெரிகிறது. தற்போது ரஜினிகாந்த் ஹிமாலயாவில் உள்ளார். இவர் சென்னை திரும்பிய உடன் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக எந்த நடிகை நடிக்க உள்ளார் என்பது பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. இப்படத்தில் ஜோதிகா நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தை அவரிடம் நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் அடிபடுகின்றன. ஆனால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இவர் ரஜினியுடன் ஏற்கெனவே ‘சந்திரமுகி’ படத்தில் இணைந்து நடித்திருந்தார். அது சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
இந்தப் படத்தை கிராமிய பின்புலத்தோடு எடுக்க இயக்குநர் திட்டமிட்டுள்ளார் என்கிறனர். ஏற்கெனவே கிராம பின்புலத்தில் இவர் அஜித்தை வைத்து ‘விஸ்வாசம்’ படத்தை இயக்கி இருந்தார். அந்தப் படம் பெரிய அளவில் ப்ளாக்பாஸ்டர் ஹிட் ஆனது. மேலும் இதற்கு டி.இமான் இசையமைக்கலாம் என்றும் தெரிகிறது. ஒளிப்பதிவாளராக வெற்றி வேலை செய்ய இருப்பதாகவும் தெரிகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமான அறிப்பு எதுவும் வெளியாகவில்லை.