‘கடாரம் கொண்டான்’ என்றால் என்ன? - விக்ரமின் ஃபர்ஸ்ட் லுக் எழுப்பும் கேள்வி
நடிகர் விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.
நடிகர் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘சாமி ஸ்கொயர்’. இது எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை. கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் வெளியீட்டு தேதி இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் மற்றும் டிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் விக்ரம் புதிய திரைப்படம் ஒன்றை நடித்து வருகிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சீனிவாஸ் குதா ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தை ‘தூங்காவனம்’ திரைப்படத்தை இயக்கிய ராஜேஷ் செல்வா இயக்குகிறார். விக்ரமுக்கு ஜோடியாக அக்ஷராஹாசன் நடிக்கிறார்.
இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்தது. அதன்படி இன்று மாலை நடிகர் கமல்ஹாசன் ‘கடாரம் கொண்டான்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார்.
ஃபர்ஸ்ட் லுக்கில் சால்ட் அண்ட் பெப்பர் லுக், டாட்டூ என முரட்டுத்தனமாக இருக்கிறார் நடிகர் விக்ரம். விக்ரமின் இந்த லுக்கை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ‘கடாரம் கொண்டான்’ என்றால் என்னவென்றும் சமூக வலைத்தளங்களில் விவாதம் நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூரில் உள்ள உலகப்புகழ் பெற்ற பெரியக்கோவிலை கட்டியவர் ராஜராஜ சோழன். அவருக்கு மகனாக பிறந்தவர் ராஜேந்திர சோழன். ராஜேந்திர சோழன் வீரத்திலும் விவேகத்திலும் சிறந்து விளங்கியவர். மலேயா பக்கம் உள்ள கடாரம் பகுதி வரை போர் தொடுத்து சென்று அந்தப் பகுதியை வென்றதால் அவருக்கு ‘கடாரம் கொண்டான்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.