தெலுங்கு தொலைக்காட்சி சீரியல் நடிகை ஸ்ராவணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஆந்திர பிரதேசத்தை பூர்வீகமாக கொண்டவர் நடிகை ஸ்ராவணி. பல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவர். தற்போதும் சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அவரது பெற்றோரிடம் பேசிவிட்டு தனது அறைக்குள் சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை.
இதையடுத்து பெற்றோர் கதவை தட்டியுள்ளனர். எந்த பதிலும் வராததால் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது ஸ்ராவணி ஃபேனில் தூக்கில் தொங்கியவாறு கிடந்தார். தொடர்ந்து அவரை மீட்ட உறவினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், காக்கினாடாவைச் சேர்ந்த ஒருவர் அவரை துன்புறுத்தி வந்ததாகவும் அவரே இந்த இறப்புக்கு காரணம் எனவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்ராவணியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து புகாரும் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில், ஐபிசி பிரிவு 306(தற்கொலைக்கு தூண்டுதல்)-ன் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தனர்.