அசத்தல் கிராஃபிக்ஸ்... மிரட்டல் சண்டைகள்... எப்படி இருக்கிறது மிராய்? | Mirai | Teja Sajja
அசத்தல் கிராஃபிக்ஸ்... மிரட்டல் சண்டைகள்... எப்படி இருக்கிறது மிராய்? (2 / 5)
சாகாவரம் அடைய நினைக்கும் அசுரனை தடுக்கும் ஹீரோவின் கதையே மிராய்!
கலிங்கத்து போரில் வெற்றிபெற்ற அசோக மன்னர், வெற்றியடைந்தாலும் தன்னால் ஏற்பட்ட பேரழிவுக்கு மனம் வருந்துகிறார். தன்னிடம் உள்ள சக்திகளை 9 புத்தகங்களில் அடைத்து, ஒன்பது பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கிறார். அந்த புத்தகங்கள் உலகின் பல மூலைகளில் மறைத்து வைக்கப்படுகிறது. பல யுகங்களாக அடுத்தடுத்த தலைமுறைகள் அப்புத்தகங்களை பாதுகாத்து வர, அந்த புத்தகங்களை அடைந்து சாகாவரத்தை பெற நினைக்கிறார் மஹாபீர் (மனோஜ் மஞ்சு). பாதுகாவலர்களில் ஒருவரான அம்பிகா (ஸ்ரேயா சரண்), வருங்காலத்தை முன்கூட்டியே அறியும் சக்தி கொண்டவர் என்பதால், பாதுகாவலர்களை அழைத்து எச்சரிக்கிறார். வரக்கூடிய ஆபத்தை எப்படி தடுக்கலாம் என இமாலய மலையில் வசிக்கும் அகத்தியரின் ஆலோசனை கேட்கிறார். அவர் சொன்ன ஆலோசனை என்ன? ஒன்பது புத்தகங்களும் பாதுகாக்கப்பட்டதா? இக்கதையில் வேதாவின் (தேஜா சஜ்ஜா) பங்கு என்ன?
`ஹனு மேன்' போலவே இந்த முறையும் இதிகாச விஷயங்களை வைத்து நிகழ்கால ஃபேண்டசி படத்தை கொடுத்திருக்கிறார் தேஜா சஜ்ஜா. அதற்கு ஏற்ப கிராஃபிக்ஸ், சண்டைக்காட்சிகள் என விஷுவலாக படத்தை அசத்தலாக கொடுத்துள்ளது படக்குழு. படத்திற்கு இன்னும் கூடுதல் பலம் சேர்ப்பது கௌரா ஹரியின் பின்னணி இசை. பல மாஸ் காட்சிகளில் பக்தி மோட் சேர்த்து அசத்தி இருக்கிறார்.
நடிப்பாக தேஜா ஒரு டெம்ப்ளேட் நடிப்பை இதிலும் தொடர்கிறார். சண்டைகளில் மாஸ் காட்டினாலும் எமோஷனல் காட்சிகள், சீரியஸ் காட்சிகளில் நடிக்க தடுமாறுகிறார். மிரட்டல் வில்லனாக மனோஜ் மஞ்சு ஃபேண்டசி படங்களில் நாம் பார்க்கும் மிக வழக்கமான வில்லனை பிரதிபலிக்கிறார். ஸ்ரேயா சரண் நடிப்பு எப்போதும் போல்தான் என்றாலும் அவரது ஸ்க்ரீன் பிரசன்ஸ் பெரிய பலம். ஜெகபதிபாபு, ஜெயராம் சின்ன ரோல் என்றாலும் சிறப்பு.
புராண கதையில், மார்டன் வெர்ஷன் என்பதை கையில் எடுத்திருக்கிறார் கார்த்திக் கட்டம்னேனி. அதற்குள் வில்லனின் பின் கதையை மிக வலுவாக எழுதி இருக்கிறார். அது படத்திற்கும் பலம் சேர்க்கிறது. சாதி பாகுபாடு எப்படி ஒருவனை சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கிறது என்பதை அழுத்தமாக அந்த பாத்திரத்தின் மூலம் பேசி இருக்கிறார். ஆனால் வில்லனுக்கு படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் ஹீரோவுக்கும் இருந்திருக்கலாம். வில்லன் ஏன் இந்த உலகை கைப்பற்ற வேண்டும் என சொல்வதில் அழுத்தமான தத்துவம் உள்ளது. ஆனால் ஹீரோ உலகை காப்பாற்ற வேண்டும் என்பதன் காரணம், அது ஏற்கனவே விதிக்கப்பட்டது என்பதாக மட்டுமே இருக்கிறது. எனவே எப்படியும் அவர் வில்லனை வென்றிடுவார் என்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கும்? படத்தின் நீளம் பெரிய பிரச்னை. தேவையே இல்லாமல் கதையை நீட்டிக்க கொண்டே போவது சலிப்பை ஏற்படுத்துகிறது. வெறுமனே கிராஃபிக்ஸ் காட்சிகளை நம்பிவிட்டதாலோ என்னவோ, எமோஷனலாக படத்தில் எதுவுமே நம்மை ஈர்க்கவில்லை.
ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஒரு சுமாரான ஃபேண்டசி படமாக எஞ்சுகிறது இந்த மிராய்.