ஐந்து நாட்களில் 100 கோடி வசூல்... மாஸ் காட்டிய மிராய்! | Mirai | Teja Sajja | Karthik Gattamneni
தேஜா சஜ்ஜா நடிப்பில் கார்த்திக் கட்டம்னேனி இயக்கி செப்டம்பர் 12ம் தேதி வெளியான தெலுங்குப் படம் `மிராய்'. படத்தில் மனோஜ் மஞ்சு, ஸ்ரேயா சரண், ரித்திகா நாயக், ஜெகபதி பாபு, ஜெயராம், கெட்டப் சீனு எனப் பலரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்குகளில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த ஆண்டு தேஜா நடித்து வெளியான `ஹனு மேன்' 296 கோடிக்கும் (GROSS) மேல் வசூல் செய்தது. இப்போது வெளியாகியுள்ள `மிராய்' படமும் வசூலில் சாதனைகளை செய்து வருகிறது.
இந்தியா முழுவதும் கனெக்ட் ஆகும் படியாக, படத்தில் ராமர் சார்ந்த விஷயங்களை வைத்தது, தர்மம் - அதர்மம் பற்றி பேசியது என பல விஷயங்களை சேர்த்திருந்தனர். விஷுவலாக தரமான கிராஃபிக்ஸ், சண்டைக்காட்சிகள், கௌரா ஹரியின் பின்னணி இசை என படத்தில் பல விஷயங்கள் சிறப்பு எனப் பாராட்டப்பட்டது. எனவே படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து, அதிக அளவில் பார்வையாளர்கள் வந்தனர்.
முதல் நாளில் உலகளவில் படத்தின் வசூல் 27.20 கோடி (GROSS) என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 3 நாட்களில் படத்தின் உலகளாவிய வசூல் 81.2 கோடி எனவும், 3 நாட்களில் 91.45 கோடி எனவும் அறிவிக்கப்பட்டது.
நேற்றோடு படம் வெளியாகி ஐந்து நாட்கள் கடந்த நிலையில், 5 நாட்களில் படம் உலகளவில் 100 கோடி வசூல் செய்துள்ளது என அறிவித்துள்ளது படத்தின் தயாரிப்பு நிறுவனம். பெரிய ஹீரோக்களின் படங்களே வசூல் செய்ய திணறும் போது, வளர்ந்துவரும் நடிகரான தேஜாவின் படம் வசூலில் சாதனை படைத்துவருவதை பார்த்து பலரும் வியக்கிறார்கள். மேலும், இரண்டாவது வாரத்தில் பெரிய போட்டி எதுவும் இல்லாததால், வரும் நாட்களில் படத்தின் வசூல் சாதனைகள் இன்னும் அதிகரிக்கும் என வணிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.