“சோத்துக்கே வழியில்லாம இருக்கோம்யா.,” விவசாயிகளின் வலியை சொல்லும் பூமி டீசர்..!
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பூமி திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
லஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் திரைப்படம் பூமி. ஹோம் மூவி மேக்கரஸ் நிறுவனம் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருக்கும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது. இதனை ஜெயம் ரவி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் இது அவருடைய 25’வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. பூமி திரைப்படத்தின் கதைக் கரு என்ன என்பதை இப்படத்தின் டீசரே நமக்கு புரியவைக்கிறது.
“வட்டிக்கு காசு வாங்கி விவசாயம் செஞ்சும்., ஒரு வேல சோத்துக்கே வழியில்லாம இருக்கோம்யா.,” என ஒலிக்கிறது ஒரு வசனம். இப்படத்தின் ஒளிப்பதிவின் தரம் டீசரிலேயே நமக்கு நன்கு விளங்குகிறது. அருமையான ப்ரேம்களை உருவாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் டட்லி. மேலும் தொடரும் டீசரில் “நாட்டோட எல்லா வளங்களையும் நாசம் பண்ணிட்டு நீங்கள்லாம் என்ன சார் பண்ணப் போறிங்க” எனக் கேட்கும் ஜெயம் ரவி விவசாயிகளின் பிரச்சனைகளுக்காக போராடும் ஹீரோவாக இப்படத்தில் நடித்திருப்பது உறுதியாகிறது. முழுமுழுக்க விவசாயிகளின் பிரச்னைகளை எடுத்துக் கூறும் படமாக இது இருக்கும் என்றே தோன்றுகிறது.
திரிஷாவுடன் ஜெயம் ரவி நடித்த சம்திங் சம்திங் திரைப்படத்திற்கு பிறகு விவசாயம் தொடர்பான ஸ்கிரிப்டில் ரவி நடித்திருக்கும் படமாக இது உள்ளது. இதற்கு முன் ஜெயம் ரவி - லஷ்மண் கூட்டணியில் 2015இல் வெளியான ரோமியோ ஜூலியட் என்ற காதல் திரைப்படம் வெற்றி அடைந்தது.