த்ரிஷாவுக்கு அபராதம் இல்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு
வருமானத்தை மறைத்ததாக நடிகை த்ரிஷாவுக்கு விதிக்கப்பட்ட ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய் அபராதத்தை ரத்து செய்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2010-2011 நிதியாண்டில் 3 கோடியே 51 லட்சம் ரூபாய்க்கான வருமானத்தை மறைத்ததாக கூறி ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நடிகை த்ரிஷாவுக்கு வருமான வரித்துறை ஆணையர் 2013-ஆம் ஆண்டு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறைக்கான மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் நடிகை த்ரிஷா மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் 2010- 2011 ஆண்டு வாங்கிய திரைப்பட அட்வான்ஸ் தொகையை , 2012 - 2013 ல் தாக்கல் செய்த திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்கில் காட்டியுள்ளதாகவும், அதை கணக்கில் கொள்ளாமல் தனக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனால் தனக்கு விதிக்கப்பட்ட ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். இந்தக் கோரிக்கையை ஏற்ற தீர்ப்பாயம் வருமான வரித்துறை இணை ஆணையர் பிறப்பித்த அபராதத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து வருமான வரித்துறை இணை ஆணையர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு, அபராதத்தை ரத்து செய்த தீர்ப்பாய உத்தரவு சரிதான் என தீர்ப்பளித்துள்ளது. மேலும் வருமானவரித்துறை முறையாக பரிசீலிக்காமல் அபராதம் விதித்திருப்பதாக கூறி வருமானவரித்துறையின் மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.