நானா படேகர் உட்பட 4 பேர் மீது நடிகை போலீஸில் புகார்

நானா படேகர் உட்பட 4 பேர் மீது நடிகை போலீஸில் புகார்

நானா படேகர் உட்பட 4 பேர் மீது நடிகை போலீஸில் புகார்
Published on

பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல இந்தி நடிகர் நானா படேகர், நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா உட்பட 4 பேர் மீது, நடிகை தனுஸ்ரீ தத்தா போலீஸில் புகார் அளித்துள்ளார்

தமிழில் ’பொம்மலாட்டம்’, ’காலா’ படங்களில் நடித்தவர் இந்தி நடிகர் நானா படேகர். இவர் மீது, நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் குற்றச்சாட்டை கூறியிருந்தார். இவர், தமிழில் ’தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்தவர். 

‘2008-ஆம் ஆண்டு 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' என்ற இந்தி படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்படும் போது, நானா படேகர் பாலியல் தொல்லை தந்தார். ஹீரோயின் மட்டுமே இடம்பெறக்கூடிய அந்த பாடலில் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்த அவரை நான் கண்டித்த போது, ’எனக்கு பிடித்ததை செய்வேன், என்னை யாரும் தட்டிக் கேட்க முடியாது’ என்று சத்தமாகச் சொன்னார். நானா படேகரின் இந்த செயலுக்கு படக் குழுவினர் ஆதரவாக செயல்பட்டனர். இதுகுறித்து நான் வெளியே கூறியதால் நானா படேகர் ஆதரவாளர்களின் மிரட்டலுக்கு ஆளானேன். என் குடும்பத்தினரோடு காரில் சென்ற போது அவரது ஆதரவாளர்களால் தாக்கப்பட்டோம்.’ என கூறி இருந்தார். 

இதை அந்தப் படத்தில் பணியாற்றிய நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா மறுத்திருந்தார். இவர், தமிழில் ஜீவாவின் ’ரவுத்திரம்’ படத்தில் நடித்தவர்.

 ‘கணேஷ் பொய்யர். அவர் இரண்டு முகம் கொண்ட மனிதர். பத்துவருடத்துக்கு முன் எனக்கு நடந்த அந்த பாலியல் தொல்லை சம்பவத்துக்கு உடந்தையாக இருந்தவர் அவர்’ என்று அவருக்கு பதில் கூறியிருந்தார் தனுஸ்ரீ. 

இந்நிலையில் இந்தப் புகாரை மறுத்த நானா படேகர், இது பொய்யான புகார். அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லை என்றால் வழக்குத் தொடர்வேன் என்று கூறியிருந்தார். அதன்படி நோட்டீஸும் அனுப்பினார்.

இவர்களை அடுத்து இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி மீதும் புகார் கூறியுள்ளார் தனுஸ்ரீ. ‘அது ’சாக்லேட்’ படத்தின் ஷூட்டிங். நடிகர் இர்பான் கானுக்கான காட்சி படமாகிக் கொண்டிருந்தது. அவருக்கான தனி ஷாட். அவர் நடிப்பை குளோசப்பாக வெளிப்படுத்த வேண்டும். எனக்கும் அந்தக் காட்சிக்கும் தொடர்பில்லை. இந்நிலையில் திடீரென்று டைரக்டர் என்னருகில் வந்தார். ’அவருக்கு எக்ஸ்பிரஷன் வர வேண்டும். உன் உடைகளை களைந்துவிட்டு அவர் முன் நில்’ என்றார். அதிர்ந்துவிட்டேன். இதைக் கேட்டு இர்பானும் அதிர்ச்சி அடைந்தார். ‘எனக்கு நடிக்க தெரியும். அதற்காக இப்படியெல்லாம் சொல்லாதீர்கள்’ என்றார் இர்பான். அதே போல அங்கிருந்த சுனில் ஷெட்டியும் இதை கண்டித்தார்’ என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து விவேக் அக்னி கோத்ரியும் தனுஸ்ரீக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்நிலையில் தனுஸ்ரீயின் கார் 10 ஆண்டுகளுக்கு முன் தாக்கப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது.

இந்திய திரையுலக பிரபலங்கள் பலர் தனுஸ்ரீக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அவரை போலீஸ் புகார் கொடுக்குமாறு கூறினர். இதையடுத்து தனுஸ்ரீ. ஓஸிவாரா போலீஸ் ஸ்டேஷனில் நானா படேகர், நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா மீது நேற்று புகார் செய்தார்.

இதுபற்றி அவர் கூறும்போது, ’நானா படேகர், கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீர் சித்திக், இயக்குனர் ராகேஷ் சாரங்க், மகாஷ்ட்ரா நவநிர் மாண் சேனா கட்சி நிர்வாகிகள் ஆகியோர் மீது புகார் கொடுத்துள்ளேன்’ என்றார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com