'காலா' வில்லன் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் ! நடிகை பகீர் பேட்டி

'காலா' வில்லன் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் ! நடிகை பகீர் பேட்டி
'காலா' வில்லன் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் ! நடிகை பகீர் பேட்டி

காலா படத்தில் வில்லனாக அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியவர் நானா படேகர். தமிழ் ரசிகர்களுக்குதான் நான் படேகர் புதுசு. ஆனால் பாலிவுட்டில், மராத்திய மொழிப் படங்களிலும் நானா படேகர் மிகவும் பிரபலம். மத்திய அரசால் வழங்கப்படும் பெருமை மிக தேசிய விருதை மூன்று முறை சிறந்த நடிகருக்கான விருதை பெற்றவர் நானா படேகர். கொஞ்சம் சைகோ கலந்த கதாப்பாத்திரம் என்றால் பட்டையை கிளப்புவார் நானா படேகர்.

இதுபோன்ற நடிப்பிற்காக "அக்னிசாக்ஷி" என்ற இந்திப் படத்துக்கு 1997 ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வாங்கினார். பாலிவுட்டில் ஈடு இணையற்ற நடிகரான நானா மீது இப்போது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்திருப்பவர் முன்னாள் மிஸ் இந்தியாவும், பாலிவுட் நடிகையுமான தனுஸ்ரீ தத்தா. தனுஸ்ரீ தத்தா தமிழில் விஷாலுடன் "தீராத விளையாட்டு பிள்ளை"யில் நாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார்.

மேலும் தெலுங்கில் பாலகிருஷ்ணா, பாலிவுட்டில் "ஆஷிக் பனாயா அப்னே" படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். இப்போது இவர்தான் நானா படேகர் தன்னை 10 ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்பு தளத்தில் பாலியல் வன்கொடுமை கொடுத்தார் என பகீரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். சில நாள்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பேட்டியளித்த தனுஸ்ரீ தத்தா பல்வேறு உள்ளக் குமுறல்களை கொட்டித் தீர்த்துள்ளார்.

இது குறித்து பேசிய தனுஸ்ரீ தத்தா " 2009 ஆம் ஆண்டு "ஹார்ன் ஓகே ப்ளீஸ்" என்ற இந்திப் படத்தில் நடித்துக்கொண்டு இருந்தேன். அப்போது படப்பிடிப்பு தளத்தில் நானா படேகர் என்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துக்கொண்டார். அப்போது இந்த விஷயம் படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவருக்கும் தெரியும். ஆனால் ஒருவர் கூட இது குறித்து வாய் திறக்கவில்லை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதான் பெண்களுக்கு படிப்பிடிப்பு தளத்தில் தரப்படும் பாதுகாப்பு" என கூறியுள்ளார்.

மேலும் நானா படேகர் குறித்து பல்வேறு விஷயங்களை அதிரடியாக தெரிவித்தார் அதில் "நானாவை பற்றி எல்லோர்க்கும் நன்றாகவே தெரியும். அவர் பொதுவாகவே பெண்களை மதிக்க தெரியாதவர். நானாவின் பின்புலம் திரைத் துறையில் இருக்கும் அனைவருக்கும் தெரியும் என்பதால் வாய் மூடி இருக்கின்றனர். நானா தன்னுடன் நடித்த சில நடிகைகளை அடித்துள்ளார், பாலியல் சீண்டல் செய்துள்ளார். ஏனோ, நானாவின் குணம் பெண்களுக்கு எதிராக மிகவும் கொடூரமாகவே இருக்கும். ஆனால் அவரின் இத்தகைய நடவடிக்கை குறித்து எந்தப் பத்திரிக்கையும் செய்தி கூட வெளியிட்டதில்லை" என வேதனை தெரிவித்தார் தனுஸ்ரீ தத்தா.

மிக வேகமாக இந்தப் பேட்டியில் பேசிய தனுஸ்ரீ தத்தா "அக்ஷய் குமாரின் அண்மை படங்களில் நானா படேகர் நடித்துள்ளார். ஏன் ரஜினிகாந்த் கூட காலா படத்தில் நானா நடித்துள்ளார். ரஜினி போன்ற மிகப் பெரிய நட்சத்திரங்கள் நானா போன்ற மிக மோசமானவர்களை தங்களது படத்தில் நடிக்க வைக்க ஒப்புக்கொள்ளக் கூடாது. அப்போதுதான் நானா போன்ற திமிர் பிடித்த நடிகர்களுக்கு புத்தி வரும்" என காட்டமாகவே கூறியுள்ளார். நானா படேகர்தான் விவசாயிகளுக்கு உதவி எல்லாம் செய்கிறார் என தனுஸ்ரீ தத்தாவிடம் கேள்வி கேட்கப் பட்டது. அதற்கு பதிலளித்த அவர் "பி.ஆர்.ஓ.க்களுக்கு நல்ல சம்பளம் கொடுத்து நானா படேகர் தன்னை பற்றி பாசிடிவ் விளம்பரம் செய்கிறார். பாவம் விவசாயிகளுக்கு என்ன தெரியும் நானாவின் உண்மை முகம் பற்றி" என தெரிவித்துள்ளார். இப்போது இந்த விவகாரம் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் அனலை கிளப்பியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com