தமிழ் ராக்கர்ஸ் ‘சர்கார்’ மிரட்டலை முறியடிப்போம் - தயாரிப்பாளர்கள் சங்கம்
‘சர்கார்’ படத்தின் ஹெச்.டி பிரிண்ட் விரைவில் இணைதளத்தில் வெளியிடப்படும் என தமிழ்ராக்கர்ஸ் பெயரில் ட்வீட் வெளியான நிலையில் தமிழ்ராக்கர்ஸ் மிரட்டலை முறியடிப்போம் என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் நாளை வெளியாக உள்ள திரைப்படம் ‘சர்கார்’. இப்படத்தின் கதைத் திருட்டு குறித்த சர்ச்சை முடிவுக்கு வந்த நிலையில் படம் திரைக்கு வருகிறது.
இந்தப் படத்தை தியேட்டர்கள் தவிர வேறு எந்த வடிவத்திலும் வெளியிடக்கூடாது என படத்தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
அதில், ‘சர்கார்’ படத்தின் விநியோகம், சிடி, டிவிடி, கேபிள் டிவி, இணையதள ஒளிபரப்பு உள்ளிட்ட அனைத்து உரிமங்களும் தங்களிடமே உள்ளதாகவும் தியேட்டர் தவிர வேறு எந்த வடிவிலும் ‘சர்கார்’ படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ‘சர்கார்’ படத்தை இணையதளத்திலோ, சேனல்களிலோ, செல்போனிலோ, சிடி, டிவிடி, கேபிள் டிவியிலோ வெளியிடக்கூடாது எனத் தடை விதித்தது.
இதைதொடர்ந்து இன்று காலை ‘சர்கார்’ படத்தின் ஹெச்.டி பிரிண்ட் விரைவில் இணைதளத்தில் வெளியிடப்படும் என தமிழ்ராக்கர்ஸ் பெயரில் ட்வீட் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழ்ராக்கர்ஸ் மிரட்டலை முறியடிப்போம் என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 23 ஆம் தேதி இரு அமைப்பினர் சார்பில் கலந்தாலோசித்தல் கூட்டம் நடைபெற்றதாகவும் அதில், யாரேனும் திரையரங்கினுள் வீடியோ கேமராவிலோ, அல்லது மொபைல் போனிலோ படம் எடுக்கிறார்களா என ஒவ்வொரு திரையரங்கிலும் கண்காணிக்க அந்தந்த திரையரங்க உரிமையாளர்கள் ஆட்களை ஏற்பாடு செய்யவேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து திரையரங்குகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் எனவும் தமிழ்ராக்கர்ஸ் மிரட்டலை முறியடிக்க வேண்டும் எனவும் எவரேனும் கேமராவில் படம் பிடித்தால் உடனே பிடித்து காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.