“எங்களுக்கு ஏன் பப்ளிசிட்டி கொடுக்கவில்லை”- ‘தமிழ்ப்படம்’ இயக்குநரின் நக்கல்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் தீபாவளியன்று திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் அதிமுக அரசை விமர்சிப்பது போல் உள்ளதாக புகார் எழுந்தது. படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளுக்கு அமைச்சர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் திரையரங்குகளை முற்றுகையிட்டு, விஜய்யின் பேனர்களை கிழித்தனர். அசம்பாவிதங்களை தடுக்க திரையரங்கில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சூழலில் சர்கார் திரைப்படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகள் இன்று பிற்பகல் காட்சிகளில் நீக்கப்பட்டிருக்கும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க இணைச் செயலாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். அதிமுகவினரின் கோரிக்கையை ஏற்று படத்தயாரிப்பு நிறுவனம் சில காட்சிகளை நீக்க முடிவு எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ‘தமிழ்ப்படம்’ இயக்குநர் அமுதன், “இதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். நாங்களும் எங்களால் முடிந்த அளவிற்கு சிறப்பானதை தரமுயன்றோம். ஆனால் எங்களுக்கு இப்படி ஒரு பப்ளிசிட்டியை தரவில்லை. எனவே இது முற்றிலும் ஒருதலை பட்சமான நடவடிக்கை” என கிண்டலாக கூறியுள்ளார். ‘தமிழ்ப்படம்’ 2ஆம் பாகத்தில் ஓ.பன்னீர்செல்வம் மெரினாவில் தர்மயுத்த செய்யும் புகைப்படத்தை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக சித்தரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.