"புறக்கணிக்கப்பட்ட ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்கு விருது கொடுப்பதா?”.. விமர்சித்த தமிழக முதல்வர்!

’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு எதிராக தமிழக முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தி காஷ்மீர் ஃபைல்ஸ், ஸ்டாலின்
தி காஷ்மீர் ஃபைல்ஸ், ஸ்டாலின்file image

2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 69வது தேசிய திரைப்பட விருதுகள், இன்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன. இந்த விருதுக்காக, நாடு முழுவதிலுமிருந்து 28 மொழிகளில் 280 திரைப்படங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அந்த வகையில், சிறந்த தேசிய ஒருமைப்பாட்டு திரைப்படத்துக்கான விருது, ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்துக்கு விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடய இன்ஸ்டா பக்கத்தில், ”சர்ச்சைக்குரிய திரைப்படம் என நடுநிலையான திரைவிமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்ட திரைப்படத்துக்குத் தேசிய ஒருமைப்பாட்டுக்கான #NargisDutt விருது அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இலக்கியங்கள், திரைப்படங்களுக்கு அளிக்கும் விருதுகளில் அரசியல் சார்புத்தன்மை இல்லாமல் இருப்பதுதான் அந்த விருதுகளைக் காலங்கடந்தும் பெருமைக்குரியவையாக உயர்த்திப் பிடிக்கும். மலிவான அரசியலுக்காகத் தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில், பிரபல பாலிவுட் நடிகர்களான அனுபம் கெர், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு (2022) மார்ச் மாதம் 11ஆம் தேதி வெளியான படம்தான், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இப்படம், வெளியானபோதே இந்திய அளவில் பேசுபொருளானது. அதாவது, இதுவரை அழுத்தமாக பேசப் படாத காஷ்மீரின் மற்றுமொரு துயர பக்கத்தை ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் பதிவு செய்திருந்தது. 1980 முதல் 1990-களில் நடந்ததாகக் கூறப்படும், காஷ்மீர் பண்டிட்கள் வெளியேற்றம் மற்றும் படுகொலையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. எனினும், கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, 340 கோடி ரூபாய் வசூலை அள்ளியது.

’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ சந்தித்த பிரச்னைகள்; தடைகள்!

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘ஏ’ (18+) சான்றிதழ் வழங்கியிருந்தது. இதேபோல் ரத்தம் தெறிக்கும் வன்முறை சம்பவங்கள் இருப்பதாகக் கூறி, பிரிட்டன் (15+), ஆஸ்திரேலியா (18+), நியூசிலாந்து (18+) சான்றிதழ்கள் வழங்கின. இந்தப் படத்தை சிங்கப்பூரில் வெளியிட அந்நாட்டு திரைப்பட தணிக்கை வாரிய அதிகாரிகள், சிங்கப்பூர் உள்துறை அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியப் பின்னர் தடை விதித்தனர். பட வெளியீட்டிற்கு முன்னதாக, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் ட்ரெயிலரில் காஷ்மீரில் வாழ்ந்த இந்து பண்டிட்களை, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொலை செய்வதாக காட்சிகள் வெளியானதால் சர்ச்சை கிளம்பியது. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் பிரிமீயர் ஷோவைப் பார்த்த மறைந்த இந்திய விமானப் படை அதிகாரி ரவி கண்ணாவின் மனைவி நிர்மல் கண்ணா, படக்குழுவிடம் தனது கணவரை உண்மைக்குப் புறம்பாக காட்டியுள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com