"விஜய் போட்ட கணக்கு ஒன்று... நடந்ததோ வேறொன்று.." - வாரிசு வசூலும் உண்மை நிலவரமும்!

"விஜய் போட்ட கணக்கு ஒன்று... நடந்ததோ வேறொன்று.." - வாரிசு வசூலும் உண்மை நிலவரமும்!
"விஜய் போட்ட கணக்கு ஒன்று... நடந்ததோ வேறொன்று.." - வாரிசு வசூலும் உண்மை நிலவரமும்!

சமூக வலைதளங்களில் எங்கு காணினும் துணிவு மற்றும் வாரிசு படங்களின் கலெக்‌ஷன் என்னவாக இருக்கும் என்ற வாக்குவாதங்களே தொடர்ந்து எழுந்து வருகிறது. துணிவு படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் பற்றிய தகவல்கள் எதுவும் முழுமையாக வராவிட்டாலும் விஜய்யின் வாரிசு படம் ஈட்டிய வசூல் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.

இதில் தயாரிப்பு நிறுவனமே வாரிசு படம் 300 கோடி கலெக்‌ஷன் செய்திருப்பதாக போஸ்டரே வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்த நிலையில்தான் வாரிசு படத்தின் மொத்த கலெக்‌ஷன் குறித்த தகவல்கள் அண்மை நாட்களாக தீயாய் பறந்துக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் வாரிசு படம் ஈட்டியது 300 கோடியல்ல, 306 கோடியே 1 லட்சம் வசூல் செய்திருக்கிறது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

அதன்படி, விஜய்யின் வாரிசு படம் தமிழ்நாட்டில் மொத்தம் 147 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை பெற்றிருந்த லலித் குமாரின் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸுக்கு வாரிசு படத்தின் தமிழ்நாடு வசூல் லாபத்தை கொடுத்திருக்கிறதா அல்லது நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறதா என்ற விவரத்தை பார்க்கலாம்.

வாரிசு படத்தின் தமிழ்நாட்டு தியேட்டர் உரிமத்தை 60 கோடி ரூபாய்க்கு வாங்கிய லலித் குமார் அதனை திருச்சி, மதுரை, சேலம் மற்றும் நெல்லை, குமரி (TK) போன்ற பகுதி விநியோகஸ்தர்களிடம் விற்றதோடு, சென்னை, செங்கல்பட்டு, கோவை மற்றும் வடக்கு ஆற்காடு, தெற்கு ஆற்காடு பகுதிகளை ரெட் ஜெயிண்ட் நிறுவனத்திடம் ஷேரின் அடிப்படையிலும் விற்றிருக்கிறார்.

அதனடிப்படையில் வாரிசு படம் தமிழ்நாட்டில் வசூலித்த மொத்த தொகை 147 கோடி ரூபாய். இதில் மாவட்ட வாரியான வசூல் லாப நஷ்ட கணக்கை கருத்தில் கொண்டால் 8.15 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட திருச்சியில் ரூபாய் 9.30 கோடி வசூலித்ததால் ரூ.1.15 கோடியும், ரூபாய் 8.25க்கு வாங்கப்பட்ட மதுரையில் ரூ.10.60 கோடி வசூலித்ததால் ரூபாய் 2.35 கோடியும், சேலத்தில் ரூபாய் 6.25 கோடிக்கு வாங்கப்பட்ட வாரிசு படம் ரூபாய் 8.40 கோடி வசூலித்ததால் ரூபாய் 2.15 கோடியும் லாபமாக கிடைத்திருக்கிறது.

இதில் திருநெல்வேலி, கன்னியாகுமரியில் வாங்கப்பட்ட ரூ.5.25 கோடி விலைக்கே வசூலும் வந்ததால் லாபமும் நஷ்டமும் இல்லாமல் இணையாக முடிந்திருக்கிறதாம். ஆகையால் 4 பகுதிகளில் விநியோகஸ்தர்களுக்கான லாபம் போக லலித் குமாருக்கு கிடைத்தது ரூ. 27 கோடியே 90 லட்சமாம்.

அதேபோல ரெட் ஜெயிண்ட் வசம் கொடுக்கப்பட்ட 5 பகுதிகளில் ரூ. 43 கோடி 45 லட்சம் வசூலிக்கப்பட்டதில், ரெட் ஜெயிண்ட்-க்கான 10 சதவிகித கமிஷான 4.35 கோடி ரூபாய் போக லலித் குமாருக்கு கிடைத்ததோ ரூ. 39 கோடியே 10 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் விநியோகஸ்தர்களுக்கு விற்ற 4 இடங்கள் மற்றும் ரெட் ஜெயிண்ட்க்கான 5 ஷேர் இடங்கள் போக பிற தமிழ்நாட்டு பகுதிகளில் லலித் குமார் சொந்தமாக வாரிசு படத்தை ரிலீஸ் செய்ய 5 கோடி ரூபாய் செலவிட்டிருப்பதால் இதற்கான அவருடைய மொத்த முதலீடு ரூ. 65 கோடியாக இருந்திருக்கிறது.

ஆனால் தியேட்டர் உரிமம் பெற்றிருந்த லலித் குமாருக்கு மொத்த லாபமாக கிடைத்திருப்பதோ 67 கோடிதான். குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் வெறும் 2 கோடி ரூபாய் மட்டுமே. மொத்த வசூல் தொகையாக வாரிசு பெற்றது 147 கோடியாக பார்க்கப்பட்டாலும் வியாபார ரீதியாக கணக்கிட்டால் உரிமம் பெற்ற லலித் குமாருக்கு இது சுமாரான லாபமாகத்தான் இருக்கும்.

இருப்பினும் விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்திருந்த லலித் குமார், தற்போது விஜய்யின் 67வது படமான லியோவை தயாரித்து வருவதால் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸுக்கான பிசினஸ் விகிதம் அடுத்தடுத்த படங்களில் உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகளவிலேயே இருப்பதாகவே கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே மற்றுமொரு திரைப்பட கண்காணிப்பாளரிடம் விசாரித்ததில், ஒட்டுமொத்தமாக வாரிசு படம் சுமார் 290 கோடி ரூபாய் அளவுக்கான வசூலை பெற்றிருக்கும் என்றும், அதில் தமிழ்நாட்டில் ரூ. 140 கோடியும், ஓவர் சீஸில் ரூ. 80 கோடி மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் வட இந்திய மாநிலங்களில் ரூ. 65 முதல் 70 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டிருக்கிறலாம் என்றும் சொல்கிறார்.

இதில் குறிப்பிடத்தகுந்த விவகாரம் என்னவென்றால் வாரிசு படத்தை தயாரித்த தில் ராஜூவுக்கு திரையரங்க ஷேர், ஓ.டி.டி மற்றும் சாட்டிலைட் விற்பனை போன்றவற்றை உள்ளடக்கி கணிசமான தொகை கிடைத்திருந்தாலும் விஜய்க்கு இருக்கும் மாஸ் ஓப்பனிங்கை கருத்தில் கொண்டு கோடிகளை கொட்டி படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு சுமாரான லாபத்தையோ அல்லது போட்ட முதலீடே திரும்ப வசூலாக கிடைக்கும் அளவுக்கே அமைந்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

அதேவேளையில் தமிழ்நாட்டில் உச்சநட்சத்திரமாக இருந்தாலும் நடிகர் விஜய்க்கான மார்க்கெட் கே.ஜி.எஃப்-ல் நடித்த யாஷ் மற்றும் பாகுபலியில் நடித்த பிரபாஸை போல தென்னிந்தியாவிலோ அல்லது பான் இந்தியா அளவிலோ அத்தனை பிரமாண்டமானதாக இருக்கவில்லை. அதனை கருத்தில்கொண்டு முதற்கட்டமாக தென்னிந்திய அளவில் மாஸ் மார்க்கெட்டை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே தெலுங்கு திரைப்பிரபலங்களான வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் வாரிசு நடிக்க விஜய் ஒப்புக்கொண்டிருக்கிறார் என்ற தகவல்களும் வெளி வந்திருக்கின்றன.

வாரிசு மூலம் 400 கோடி ரூபாய் கலெக்‌ஷன் பார்க்கலாம் என விஜய்யும் எதிர்பார்த்திருக்கிறாராம். ஏனெனில் அவரது முந்தைய படமான பீஸ்ட் கலவையான விமர்சனங்களை சந்தித்திருந்தாலும் 290 முதல் 300 கோடி வரையில் வசூல் செய்ததால் வாரிசு படத்துக்கான எதிர்பார்ப்பையும் சற்று உச்சத்திலேயே கணக்கிட்டு வைத்திருந்தாராம். ஆனால் கள நிலவரமோ வேறு மாதிரியாக அமைந்திருக்கிறது என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com