உழவர்கள் வேட்டி இழந்தால் நாடு நிர்வாணமாகிவிடும் என்று கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் வழக்கில் தமிழகத்திற்கு 177.25 டிஎம்எசி தண்ணீரை ஒதுக்கீடு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம், 192 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க உத்தரவிட்ட நிலையில் உச்சநீதிமன்றம் அதனை குறைத்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பில் தமிழகத்திற்கான தண்ணீர் குறைக்கப்பட்டு இருந்தாலும், உரிய காலத்தில் தண்ணீரை முறையாக திறந்துவிடுவது, அதனை கண்காணிக்க காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரங்களில் அமைப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் கூறப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக உச்சநீதிமன்றம் விதித்த கெடு, இன்றுடன் முடிய உள்ள நிலையில், இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், தமிழக விவசாயிகள் வேதனையில் உள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சினிமாதுறை பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக வைரமுத்து தனது ட்விட்டரில், “உச்சநீதிமன்றத் தீர்ப்பே எங்கள் உழவர்களின் வேட்டியைக் கிழித்துவிட்டது. மத்திய அரசோ கிழிந்த வேட்டியையும் பறிக்கப் பார்க்கிறது. உழவர்கள் வேட்டி இழந்தால் நாடு நிர்வாணமாகிவிடும்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், “ஆசியாவின் மிகப்பெரிய சமவெளிப் பகுதிகளுள் ஒன்று காவிரி டெல்டா. அது அழிவது தமிழகத்திற்கு மட்டுமல்ல; இந்தியாவிற்கே கேடு. காவிரி டெல்டாவை வறட்சியிலிருந்து காப்பாற்ற மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்றே தீர்வு” என்று தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.