“ரஜினி தன் ரசிகர்களுக்கு சகிப்புத்தன்மை கற்பிக்க வேண்டும்” - சர்ச்சையில் பிரதீப் ஜான்
ரஜினி பதிவு நீக்கப்பட்டதற்காக கருத்து கூறிய தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானை அவரது ரசிகர்கள் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
கொரோனா தடுப்பு முயற்சியின் ஒரு பகுதியாக நாளை நாடு முழுவதும் சுய ஊரடங்கை கடைப்பிடிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆகவே நாளை நாடு முழுவதும் பேருந்துகள், ரயில் சேவைகள் என அனைத்து இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. பிரதமரின் கோரிக்கையை ஏற்று பலரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கும்படி வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் நேற்று ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு விளக்கம் அளித்தார்.
இதனிடையே பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நாளை முழு சுய ஊரடங்கை கடைப்பிடிக்குமாறு நடிகர் ரஜினிகாந்த் அவரது ட்விட்டர் பக்கத்தில் நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், “கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது கட்டத்தில் இருக்கிறது. அது மூன்றாவது கட்டத்திற்கு போய்விடக்கூடாது. ஜனங்கள் நடமாடுகின்ற இடங்களில் உள்ள கொரோனா வைரஸ் 12 இல் இருந்து 14 மணிநேரம் அது பரவாமல் இருந்தாலே அதை மூன்றாவது கட்டத்திற்குப் போகவிடாமல் தடுத்துவிடலாம். அதற்காகதான் பிரதமர் மோடி அவர்கள் 14 மணிநேர சுய ஊரடங்கு உத்தரவு கொடுத்துள்ளார்கள்” எனக் கூறியிருந்தார்.
இதனிடையே ரஜினிகாந்த் கூறிய தகவல்களில் சில பிழைகள் உள்ளதாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து அவரது ட்விட்டர் பக்கத்தில் இருந்த வீடியோ நீக்கப்பட்டது. 14 மணி நேரம் வரை பரவாமல் இருந்தால் 3வது நிலையை தவிர்க்கலாம் என ரஜினி கூறியிருந்தார். இது தங்களது விதிமுறைக்கு எதிரானது எனக்கூறி ட்விட்டர் நிறுவனம் ரஜினி வீடியோவை நீக்கியது.
இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் அவர், “ரஜினி நல்ல நோக்கத்துடன் வீடியோவை வெளியிட்டிருந்தாலும், அது காட்டுத்தீ போல் பரவிய ஒரு போலி செய்தியாகிவிடும். கொரோனா வைரஸ் 12 மணிநேரத்தில் இறக்காது என்பதை நினைவில் கொள்க வேண்டும். அத்தகைய ஆராய்ச்சிக்கான ஆதாரங்கள் எங்கும் இல்லை” என்று கூறியிருந்தார். மேலும், “ரஜினி வீடியோவை ட்விட்டர் மிக வேகமாக எடுத்தது. போலி செய்திகள் பரவுவதைத் தடுக்க, சமூக ஊடக நிறுவனங்கள் மிக வேகமாக செயல்படுவதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஆகவே ட்விட்டர் செயல்பாட்டிற்கு தலை வணங்குகிறேன். சோதனை நேரங்களில், பிரபலமானவர்கள் மக்களுக்கு செய்திகளை தெரிவிப்பதில் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்” என்று கூறி இருந்தார்.
அதனைத் தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் அவரது பதிவை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். பலர் அவரது நோக்கம் விழிப்புணர்வு ஏற்படுத்துதானே தவிர, போலி செய்தியை பரப்புவது அல்ல என்று கூறி கண்டித்தனர். மேலும் ஒருவர், “நீங்கள் கூடதான் மழை வரும் என்று செய்தி போடுகிறீர்கள். அன்றைக்கு சொன்னதைப் போல் மழை வரவில்லை என்பதற்காக அந்தப் பதிவை போலி எனக் கூறி ட்விட்டர் நீக்கி உள்ளதா?” எனக் கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் பலர் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அதற்கு பிரதீப் ஜான், “தவறு என்று சொல்வதற்காக ஒரு பதிவை போட்டதற்கு இவ்வளவு துஷ்பிரயோகங்கள். இப்போது என்னை திமுக தொண்டராக முத்திரைக் குத்தி, எனது மதத்தையும் குறிவைத்து தாக்குகிறார்கள். ரஜினியை பின்பற்றுபவர்களில் "சிலருக்கு" துஷ்பிரயோகம் செய்ய மட்டுமே தெரிந்துள்ளது. ரஜினி தனது ரசிகர்களுக்கு கற்பிக்க வேண்டிய முதல் விஷயம் சகிப்புத்தன்மை. அவர்கள் நன்மையை விட அவருக்கு அதிக தீங்கு செய்கிறார்கள்” என்று பொருள்படும்படி கூறியுள்ளார்.