டும்.. டும்..டும்! இந்தாண்டு திருமணம் செய்துகொண்ட தமிழ் சினிமா பிரபலங்கள் # 2022Rewind

டும்.. டும்..டும்! இந்தாண்டு திருமணம் செய்துகொண்ட தமிழ் சினிமா பிரபலங்கள் # 2022Rewind
டும்.. டும்..டும்! இந்தாண்டு திருமணம் செய்துகொண்ட தமிழ் சினிமா பிரபலங்கள் # 2022Rewind

2022-ம் ஆண்டு நிறைவடைய இன்னும் 17 நாட்களே உள்ளன. இதனை முன்னிட்டு தமிழ் சினிமா பற்றிய விஷயங்களை தினம் ஒன்றாக இங்கே பகிர்ந்து வருகிறோம். அந்த வகையில், இந்தாண்டு திருமணம் செய்துகொண்ட தமிழ் சினிமா பிரபலங்கள் குறித்து ஒரு சின்ன பிளாஷ்பேக் பார்க்கலாம்.

1. நயன்தாரா - விக்னேஷ் சிவன்

நீண்ட வருடங்களாக சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி, ரசிகர்களும் எதிர்பார்த்த திருமணம் என்றால் அது நயன்தாரா திருமணம் தான். கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் இருவருக்கும் மிகப் பிரம்மாண்டாக திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சூர்யா - ஜோதிகா, ஷாரூக்கான், எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர்கள் அட்லீ, மணிரத்னம், இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் உள்பட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘நானும் ரௌடிதான்’ படத்தில் நடித்ததன் மூலம் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆயிகோருக்கு இடையில் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது. இருப்பினும், 2016 ஆம் ஆண்டே அவர்கள் இருவரும் பதிவு திருமணம் செய்த தகவலும் தெரியவந்தது. அதன்படி 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் தேதி விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் பதிவு திருமணம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

2. ஹன்சிகா மோத்வானி - சோஹெல் கத்தூரியா

பாலிவுட்டில் தொலைக்காட்சித் தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிப் பின்னர், தனுஷின் ‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி கதாநாயகியாக இருந்துவந்த இவரின் திருமணமும் ஹாட் டாபிக்காக இருந்தது.

கடந்த நவம்பர் 2-ம் தேதி தனது வருங்கால கணவரும், நீண்ட நாள் நண்பரும், தொழில் பாட்னருமான சோஹெல் கத்தூரியவை, ஹன்சிகா மோத்வானி அறிமுகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து உறவினர்கள், குடும்ப நண்பர்கள் முன்னிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முண்டோட்டா பேலஸில் மிகப் பிரம்மாண்டமாக கடந்த 4-ம் தேதி இவர்களது திருமணம் நடைபெற்றது.

3. கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்

கௌதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் கடந்த 2019-ம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் வெளியான ‘தேவராட்டம்’ படத்தில் ஒன்றாக நடித்தபோது காதலித்ததாக கூறப்பட்டது. இவர்களது திருமணம் குறித்த செய்திகள் வெளிவந்துக் கொண்டிருந்த நிலையில், கடந்த நவம்பர் 23-ம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கௌதம் கார்த்தி தான் முதலில் தனது காதலை வெளிப்படுத்தியதாகவும், நேரம் கேட்டு பின் யோசித்து மஞ்சிமா மோகன் அவருக்கு பதில் கூறியதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் 28-ம் தேதி சென்னையில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர்.

4. ஆதி - நிக்கி கல்ராணி

‘மரகத நாணயம்’ மற்றும் ‘யாகாவாராயினும் நா காக்க’ ஆகிய இரண்டு படங்களில் சேர்ந்து நடித்திருந்தனர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி. இதையடுத்து இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்துக்கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், கடந்த மே மாதம் 18-ம் தேதி சென்னையில் ஓட்டல் ஒன்றில் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

5. பூர்ணா - ஆசிஃப் அலி

கேரள மாநிலம் கண்ணூரை பூர்வீகமாகக் கொண்ட நடிகை பூர்ணா, நடிகர் பரத்தின் ஜோடியாக ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்தப் படத்தை தொடர்ந்து, ‘கொடைக்கானல்’, ‘கந்தக்கோட்டை’, ‘துரோகி’, ‘காப்பான்’, ‘லாக்கப்’ உள்பட பல படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 24-ம் தேதி இரவு, துபாயில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் தொழிலதிபர் ஷானித் ஆசிஃப் அலியை இஸ்லாமிய முறைப்படி விமரிசையாக திருமணம் செய்துகொண்டார். நண்பர்கள் வழியாக இருவரும் அறிமுகமானலும், இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்து முடிந்த புகைப்படங்களை நடிகை பூர்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

6. ஹரீஷ் கல்யாண் - நர்மதா

‘சிந்து சமவெளி’ என்ற திரைப்படத்தின் மூலம், கடந்த 2010-ம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யான். தொடர்ந்து ‘பொறியாளன்’, ‘வில் அம்பு’, ‘பியார் பிரேமா காதல்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான இவர், கடந்த அக்டோபர் மாதம் 28-ம் தேதி சென்னை திருவேற்காட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நர்மதா என்றப் பெண்ணை, இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நேரிலும், சமூகவலைத்தளத்திலும் பிரபலங்கள் ஏராளமானோர் வாழ்த்துகள் தெரிவித்திருந்தனர்.

* மேலும் ஏ.ஆர். ரஹ்மானின் மூத்த மகளும், பாடகியுமான கதீஜா - சவுண்ட் என்ஜீனியர் ரியாசுதீன் சேக் தம்பதிக்கு கடந்த மே மாதம் 5-ம் தேதி எளிதாக திருமணமும், அதன்பின்னர் ஜூன் மாதம் மிகப் பிரம்மாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. அத்துடன் இசையமைப்பாளர் டி. இமான், அமெலி என்பவரை கடந்த மே மாதம் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

* இதேபோல் பாலிவுட்டில் நடிகை ஆலியா பட் - ரன்பீர் கபூர், மௌனி ராய் - சுராஜ் நம்பியார் உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் திருமணம் நடைபெற்றது.

* சின்னத்திரையில் பிரபலமான புகழ் - பென்ஸி , மஹாலஷ்மி - ரவீந்திரன், திவ்யா ஸ்ரீதர் - அர்ணவ், முனீஸ் ராஜா - பிரியா, நட்சத்திரா - விஷ்வா, நவீன் - கண்மணி, காயத்ரி ரெட்டி - நிஷாந்த், ரித்திகா - வினோத், ஸ்வேதா - மால் மருகா, சுகேஷ் - நந்தினி உள்ளிட்ட பிரபலங்கள் திடீர் திருமணம் செய்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com