இசையை அர்த்தமுள்ளதாக மாற்றும் ரசிகர்கள் அவதியடைவது வருத்தமானது! - யுவன்

ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய மறக்குமா நெஞ்சம் இசைக்கச்சேரியில் பங்கேற்கவந்த ரசிகர்கள் பாதிக்கப்பட்டது குறித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் - யுவன் சங்கர் ராஜா
ஏ.ஆர்.ரஹ்மான் - யுவன் சங்கர் ராஜாTwitter

நேற்று முன்தினம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய இசை கச்சேரியில் முறையான ஏற்பாடுகள் செய்யப்படாததால் ரசிகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது பெரும் பேசுபொருளான நிலையில் இசைக்கச்சேரியை ஒருங்கிணைத்த நிறுவனம் அசௌகரியத்திற்காக மன்னிப்பு கோரியது.

ஏ.ஆர்.ரஹ்மான் கான்சர்ட்
ஏ.ஆர்.ரஹ்மான் கான்சர்ட்Marakkuma Nenjam

பின்னர் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த ஏ.ஆர்.ரஹ்மான், “டியர் சென்னை மக்களே, டிக்கெட் வாங்கியும் எதிர்பாராத சூழ்நிலையால் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க வரமுடியாதவர்கள் நீங்கள் வாங்கிய டிக்கெட் நகலை arr4chennai@btos.in என்ற மெயில் ஐடிக்கு அனுப்பி வையுங்கள். உடன் உங்களது குறைகளையும் கூறினால் எங்கள் குழு தகுந்த நடவடிக்கை எடுக்கும்” என தெரிவித்திருந்தார். மேலும் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்த ரஹ்மான், “ஒரு இசையமைப்பாளராக, ஒரு அற்புதமான நிகழ்ச்சியை வழங்குவதே எனது வேலை, மற்ற அனைத்தையும் கவனித்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால் அனைத்தும் எங்கேயோ தவறுதலாக அமைந்துவிட்டது. எனக்கு ஒவ்வொரு ரசிகரும் முக்கியம்” என பேசியிருந்தார்.

எதிர்காலத்தில் எல்லாம் சரியாக நடக்கவேண்டும்!- யுவன் சங்கர் ராஜா

Yuvan Shankar Raja
Yuvan Shankar RajaX

இந்நிலையில் மறக்குமா நெஞ்சம் இசைக்கச்சேரி குறித்து தற்போது பேசியிருக்கும் யுவன் சங்கர் ராஜா இது குறித்த அறிக்கையை தனது X வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “பெரிய நிகழ்வை நடத்துவது என்பது எப்போதும் ஒரு சிக்கலான பணி. இதுபோன்ற நிகழ்வில் கூட்டநெரிசல் போன்ற அசௌகரியங்கள் ஏற்படுவது துரதிஷ்டவசமானது. இசையமைப்பாளாரான எங்களின் இசையை அர்த்தமுள்ளதாக மாற்றும் ரசிகர்கள் அவதியடைவது வருத்தத்திற்குரியது. இது ஒரு பாடம் இதிலிருந்து கற்றுக்கொண்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், இடையூறுக்கான காரணங்களை ஆய்வு செய்து இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், “ஒரு சக இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மானுக்கு துணை நிற்க விரும்புகிறேன். இனிவரும் காலத்தில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்”. யுவன் வெளியிட்டுள்ள இந்த அறிக்கைக்கு ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com