வெப் சீரிஸான ராஜேஷ்குமாரின் க்ரைம் கதை! | Rajeshkumar | Regai
பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார். இவர் எழுதிய பல க்ரைம் நாவல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இப்போது இவரது நாவலின் கதையை மையமாக வைத்து ‘ரேகை’ என்ற த்ரில்லர் சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் ராஜேஷ் குமார் நாவலின் மையக்கதையிலிருந்து ஈர்க்கப்பட்ட இந்த தனித்துவமான தமிழ் சீரிஸை, தினகரன் M எழுதி, இயக்கியுள்ளார். பாலஹாசன், பவித்ரா ஜனனி, போபலன் பிரகதேஷ், வினோதினி வைத்யநாதன், ஸ்ரீராம் எம், அஞ்சலி ராவ், இந்திரஜித் E. ஆகியோர் நடித்துள்ளனர். ஐஸ் டிரக் ஓட்டுநர் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட விபத்தில் இறந்துவிடுகிறார். அவர் கொண்டு செல்லும் ஐஸ்கட்டிகளுக்குள் ஒரு துண்டிக்கப்பட்ட கை கண்டுபிடிக்கப்பட, அதன் பின்னணியில் இருக்கும் விஷயங்களை மையமாக வைத்து நகர்கிறது இந்த சீரிஸ்.
இந்த சீரிஸ் பற்றி எழுத்தாளர் ராஜேஷ் குமார் கூறுகையில், "ஒவ்வொரு குற்றக் கதையும் முதலில் மனித மனதில்தான் பிறக்கிறது. ‘ரேகை’யில் என்னை ஈர்த்தது, சாதாரணமாகத் தோன்றும் ஒரு சிறு யோசனை எவ்வாறு சமூகத்தின் இருண்ட மூலைகளுக்கு இழுத்துச் செல்கிறது என்பதே. என் உலகிலிருந்து ஒரு ஐடியாவை புதிய படைப்பாளர் எடுத்து, முற்றிலும் புதிதாக ஒரு படைப்பை உருவாக்கும்போது, அந்தக் கதை இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதற்கான சான்று இந்த சீரிஸ்” என்றார். ஏழு எபிசோடுகள் கொண்ட கிரைம் திரில்லர் ‘ரேகை’ சீரிஸ் நவம்பர் 28 முதல் ஜீ5 தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

