Mamitha Baiju
Mamitha BaijuSuper Sharanya, Dude, Premalu

சோனா, ரீனு, குரல் (எ) மமிதா... யார் இந்த மமிதா பைஜூ? | Mamitha Baiju | Dude

இத்தனைக்கும் `சூப்பர் ஷரண்யா'ல் லீட் ரோல் அனஸ்வரா ராஜன். ஆனால் அவரை தாண்டி ரசிகர்களை சோனா பாத்திரத்தில் கவர்ந்தார் மமிதா. அது எவ்வளவு தூரம் என்றால், சோனா பாத்திரத்தை வைத்து தனியாக spin-off படம் எடுங்கள் என இயக்குநரிடம் ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு.
Published on

சினிமாவில் இப்போதைய ட்ரெண்டே மமிதா பைஜூ தான். பிரேமலு படத்தின் மூலம் பலருக்கும் பரிட்சயம் ஆன மமிதா, டியூட் மூலமும், கருத்த மச்சான் டான்ஸ் வீடியோ மூலமும் இப்போது எல்லா இடத்திலும் ட்ரென்டிங். யார் இந்த மமிதா?

அவர் யார் என பார்க்கும் முன்பு, அவரது பெயர் மமிதா ஆன சுவாரஸ்யமான கதையை பார்க்கலாம். பைஜூ கிருஷ்ணன் - மினி தம்பதி தங்கள் மகளுக்கு இட்ட பெயர் நமிதா பைஜூ. அவரை பள்ளியில் சேர்க்க சென்ற போது பிறப்பு சான்றிதழை பார்த்த பள்ளி முதல்வர், "நீங்க நமிதானு சொன்னீங்க, சர்டிஃபிகேட்ல மமிதானு இருக்கே?" எனக் கேட்ட பின்பு தான் சான்றிதழில் பெயர் தவறுதலாக வந்ததை கவனித்திருக்கிறார்கள் பெற்றோர். நமிதா நிறையே பேர் இருக்கிறார்கள், மமிதா புதிதாக இருக்கிறது, எனவே இந்த பெயரே இருக்கட்டும் என பள்ளி முதல்வர் கொடுத்த யோசனையால் உருவானதே மமிதா என்ற பெயர்.

Mamitha
Mamitha

அம்மா அப்பா இருவரும் மருத்துவர்கள் என்பதால், தானும் மருத்துவர் ஆக வேண்டும் என்பதே மமிதாவின் சிறுவயது கனவு. 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மமிதாவுக்கு, அவரது தந்தையின் நண்பர் அஜியின் மூலம் வருகிறது முதல் சினிமா வாய்ப்பு. அப்போது அஜி Sarvopari Palakkaran என்ற படத்தை தயாரித்துக் கொண்டிருக்க, அதில் ஒரு பாத்திரத்திற்காக ஆடிஷனில் கலந்து கொள்ள மமிதாவை அழைக்கிறார். அப்படி அவர் அந்த படத்தில் நடிக்க துவங்குகிறது சினிமா பயணம். அதன் பின் `Honey Bee 2', `Dakini', `Krishnam', `Varathan', `Vikruthi', `Operation Java' எனப் பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் தொடர்ந்து நடித்தார். எனவே மருத்துவர் கனவை கைவிட்டு முழுநேரம் சினிமாவில் நடிக்கவா எனப் பெற்றோரிடம் சம்மதம் கேட்க, அவர்களும் பச்சைக் கொடி காட்டுகிறார்கள்.

சினிமா பயணத்தில் மமிதாவுக்கு முதல் ப்ரேக் கொடுத்த படம் கிரிஷ் ஏ டி இயக்கத்தில் நடித்த `சூப்பர் ஷரண்யா'. இத்தனைக்கும் அதில் லீட் ரோலான ஷரண்யா பாத்திரத்தில் நடித்திருந்தது அனஸ்வரா ராஜன். ஆனால் அவரை எல்லாம் தாண்டி ரசிகர்களை சோனா தாமஸ் (எ) சோனாரே பாத்திரத்தில் நடித்து கவர்ந்தார் மமிதா. ஹீரோயினின் தோழி பாத்திரம் என்றாலும், அதில் மமிதா கொடுக்கும் காமெடி ரியாக்ஷன்களும், Swag, கெத்து என அசத்தி இருப்பார். அது எவ்வளவு தூரம் வரவேற்பு பெற்றது என்றால், சோனா பாத்திரத்தை வைத்து தனியாக spin-off படம் எடுங்கள் என இயக்குநரிடம் ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு.

Mamitha Baiju
Mamitha BaijuPremalu

அடுத்ததாக `Pranaya Vilasam',`Ramachandra Boss & Co' என இரண்டு சுமார் படங்களில் நடித்த மமிதாவின் திரைப்பயணத்தில் மீண்டும் ஒரு மேஜிக்கை நிகழ்த்தியவர் அதே கிரிஷ் ஏ டி தான். அந்த மேஜிக்கின் பெயர் `பிரேமலு'. அந்தப் படத்தின் ஹிட் மமிதாவை மிகப் பிரபலமாக்கியது. பிரேமலு கேரளாவில் மட்டுமல்லாமல், தமிழ்நாடு உட்பட பிற மாநிலங்களிலும் மிகப்பெரிய ஹிட். இதன் பிறகு ஜிவி பிரகாஷ் நடித்த ரெபல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமார். அந்தப் படம் பெரிய வரவேற்பு பெறவில்லை, கூடவே மமிதாவுக்கு அப்படத்தில் காட்சிகளும் குறைவே.

Mamitha Baiju
Mamitha BaijuDude

எனவே தமிழ் சினிமா பொறுத்தவரை மமிதாவின் என்ட்ரியை அழுத்தமாக பதிவு செய்திருப்பது `டியூட்' தான். யதார்த்தமான ஒரு முகம், அசத்தலான நடிப்பு, மிரட்டலான டான்ஸ், குறையே வைக்காத ஹூமர் என தில் ராஜூ சொல்வது போல, காமெடி வேணுமா காமெடி இருக்கி, டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கி, பர்பார்மன்ஸ் வேணுமா அதுவும் இருக்கி என மாஸ் காட்டுகிறார்.

Mamitha Baiju
Mamitha BaijuJana Nayagan, D54, Suriya 46

இப்போது அடுத்த படங்களாக அவர் கைவசம் இருக்கும் பட்டியலை பார்த்தாலே இன்னும் சில ஆண்டுகளுக்கு மமிதா இந்திய சினிமாவில் முக்கியமான ஒரு ரவுண்ட் வர நிறைய வாய்ப்பு உள்ளது என உறுதியாக சொல்ல முடியும். விஜயின் `ஜனநாயகன்', தனுஷின் `D54', சூர்யா நடிக்கும் `Suriya 46' என தமிழில் எதிர்பார்ப்பு அதிகம் உள்ள படங்களில் இருக்கிறார் மமிதா. இது போக கிரிஷ் ஏ டி அடுத்து இயக்கும் `Bethlehem Kudumba Unit', ராம்குமார் இயக்கத்தில் `இரண்டு வானம்' படங்களும் இந்த லிஸ்டில் இருக்கின்றன. அவரது திரைப்பயணத்தில் இன்னும் என்ன சுவாரஸ்யமான படங்கள், பாத்திரங்கள் இணைகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com