"செட் போட நினைத்த போது விஜய் சார் செய்தது" - ஜனநாயகன் கலை இயக்குநர் செல்வகுமார் | Jana Nayagan
விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கியுள்ள படம் `ஜனநாயகன்'. பொங்கல் வெளியீடாக படம் ஜனவரி 9 வெளியாகவுள்ளது. பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, ப்ரியாமணி, பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் எனப் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். விஜயின் கடைசி படம் என்பதால் இதன் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
ஜனநாயகன் படத்தில் கலை இயக்குநராக பணியாற்றியுள்ள வி செல்வகுமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் படம் உருவான விதம் பற்றி பேசி இருக்கிறார். அதில் "படம் ஜனவரியில்தான் ரிலீஸ் என்பதால், இப்போது அதிகம் பேச முடியாது. நான் உதவி கலை இயக்குநராக விஜய் சாரின் படங்களில் வேலை செய்திருக்கிறேன். ஆனால், ஒரு கலை இயக்குநராக, விஜய் சாருடன் இதுதான் என் முதல் படம். ஹெச்.வினோத் ரொம்ப வருஷமாகவே என்னுடைய வேலைகளை கவனிக்கறார். 'புறம்போக்கு' படம் பார்த்துட்டு அவர் எனக்கு அனுப்பிய மெசேஜை இன்னமும் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். ஜனநாயகனுக்காக அவர் என்னைக் கூப்பிட்டு, முழு ஸ்கிரிப்ட்டையும் கையில் கொடுத்துவிட்டார். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு முன் தயாரிப்புத் திட்டமிடல்களுக்காக ரெண்டு மாத கால அவகாசம் கொடுத்தார் வினோத்.
படத்தின் பெரும் பகுதியை செட் போட்டுதான் படமாக்கியிருக்கிறோம். எல்லாவற்றையும் அரங்கத்திற்குள்ளேயே படமாக்கி விடலாம் என தான் திட்டமிட்டோம். கடற்கரையையே செட் போட நினைத்தோம். இதைக் கேள்விப்பட்டு விஜய் சார், 'கடற்கரையிலேயே ஷூட் செய்திடலாம்' என கிளம்பி வந்துவிட்டார். ஈ.சி. ஆரில் உள்ள ஒரு கடற்கரையில் செட் போட்டு இரவு ஷூட் செய்தோம். இந்தப் படம் ஆரம்பிக்கும்போதே, என்னுடைய வேலை வினோத்திற்கு பிடித்துவிட்டது. அந்த அளவுக்கு அவரும் தயாரிப்பாளர்களும் முழுச் சுதந்திரம் கொடுத்தனர். என்னுடைய வேலைகளை பார்த்துட்டு ஒருநாள் அவர், 'நீங்க ராஜமௌலி சார், சஞ்சய் லீலா பன்சாலிகிட்ட வேலை செய்திருக்க வேண்டியவர்' என மனம் திறந்து பாராட்டினார். வினோத்கிட்ட வேலை செய்தது இனிமையான அனுபவம்." என்றார்.