பாடல்கள் + பின்னணி இசை படத்துக்கு முன்பே ரிலீஸ்! - இளையராஜா இசை பற்றி கார்த்திக் சுப்புராஜ்!
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் கார்த்திக் சுப்பராஜ். ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘பேட்ட’, ‘மகான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘ரெட்ரோ’ போன்ற திரைப்படங்களைக் கொடுத்தவர், அடுத்ததாக கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் தனது பத்தாவது படத்தைத் துவங்கினார். புதுமுகங்களின் நடிப்பில் உருவாகி வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படத்திற்காக முதல்முறை இளையராஜாவுடன் பணியாற்றுகிறார் கார்த்திக் சுப்பராஜ். இது இளையராஜாவின் 1,540வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இளையராஜாவுடன் பணியாற்றுவது குறித்தும், படத்தில் ஆல்பம் வெளியீடு குறித்தும் இப்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் "என் பத்தாவது திரைப்படம், என் இதயத்தில் ஆழமாக வேரூன்றிய ஒரு கதை. 'மகான்' படத்திற்குப் பிறகு நான் உருவாக்க விரும்பியதும் இதுவே. என் நம்பிக்கையின்படி, ஒரு கதை தன்னைக் கூறுபவரையும், அது சொல்லப்பட வேண்டிய நேரத்தையும் தானே தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. இந்தக் கதை தனக்கென உரிய நேரத்தை எடுத்துக்கொண்டது; இப்போது, அதனைச் சுற்றியுள்ள மிகச் சிறந்த மனிதர்களைக் கொண்டு இது உருவாக்கிக் கொண்டுள்ளது.
இந்தப் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரம் என்னவென்றால்... இசை மேஸ்ட்ரோ இளையராஜா சார் இதற்கு இசையமைத்ததுதான். அவருடைய 1540வது படம். நான் ராஜா சாரின் இசையைக் கேட்டு வளர்ந்தேன். என் வாழ்க்கையின் ஒவ்வொரு உணர்ச்சியும் ஏதோ ஒரு வகையில் அவருடைய பாடல்களிலோ அல்லது பின்னணி இசையிலோ இணைந்திருக்கிறது. மகிழ்ச்சி, சோகம், காதல், கோபம், கருணை, பரிவு, ஊக்கம்... எல்லாமே அவருடைய இசையுடன் பிணைந்துள்ளன. அவர் எனக்கு ஒரு வாழ்க்கை முறை, நம்மில் பலருக்கும் அப்படித்தான் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவருடன் பணியாற்றுவது என் வாழ்நாள் கனவாக இருந்தபோதிலும், எனது முந்தைய படங்களுடன் அவரிடம் செல்ல எனக்குத் தைரியம் வந்ததில்லை. ஆனால் இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பை முடித்த பிறகு, அதை ராஜா சாரிடம் காட்ட வேண்டும் என்று தோன்றியது. அவர் நிச்சயம் சம்மதிப்பார் என்றும் உறுதியாக நம்பினேன். அவர் சம்மதித்தார்!!
ஒரு சனிக்கிழமை மாலையில் அவர் படத்தைப் பார்த்தார். அவருக்கு அது மிகவும் பிடித்திருந்தது, மறுநாள் காலையிலேயே நாம் பணியாற்ற தொடங்கலாம் என்றும் கூறினார். அன்று முதல், அடுத்த 25 நாட்கள் 'ராக தேவன்' உடனான ஒரு ஆனந்தமான ஆன்மீகப் பயணம் அமைந்தது. அந்த ஜாம்பவான் இசையமைப்பதைப் பார்ப்பது ஒரு கனவு போன்ற அனுபவம்... ஒரு உண்மையான வரம். பாடல்களைத் தவிர, இந்தப் படத்தின் பின்னணி இசையையும் படம் வெளியாவதற்கு முன்பு ஒரு தனி ஆல்பமாக வெளியிட வேண்டும் என்று ராஜா சார் கூறினார். ஆம், நாங்கள் அதை விரைவில் வெளியிடுகிறோம், நீங்கள் அனைவரும் அதைக் கேட்டு, உணர்ந்து, அதை கேட்டு மெய்மறந்து போவதை பார்க்க என்னால் காத்திருக்க முடியவில்லை." எனக் குறிப்பிட்டுள்ளார்.

