இயக்குநரான விஷால்... வெளியான அறிவிப்பு! | Vishal | Magudam | Ravi Arasu
நடிகர் விஷால் தற்போது `மகுடம்' படத்தில் நடித்து வருகிறார். இது அவரின் 35வது படமாக தயாராகி வருகிறது. `ஈட்டி', `ஐங்கரன்' படங்களை இயக்கிய ரவி அரசு இப்படத்தை இயக்கி வந்தார். சமீபகாலமாக இப்படத்தை விஷாலே இயக்குகிறார், ரவி அரசு இப்படத்திலிருந்து விலகுகிறார் என்பது போன்ற செய்திகள் உலவி வந்தன. சமீபத்தில் விஷால் ஒரு காட்சியை இயக்குவது போன்ற வீடியோவும் வெளியானது. இந்த நிலையில், விஷாலே இதனை அறிவிப்பு வெளியிட்டு உறுதி செய்திருக்கிறார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் "அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். தீப ஒளியின் தித்திக்கும் தீபாவளி பண்டிகை எப்போதும் என்றென்றும் உங்கள் இல்லங்களிலும் இதயங்களிலும் அமைதி, மகிழ்ச்சி, சந்தோஷம், ஆரோக்கியம், செழிப்பு அனைத்தையும் பொழியட்டும். இந்த சிறப்பான நாளில், எனது புதிய திரைப்படமான ’மகுடம்’ (Magudam/Makutam) படத்தின் இரண்டாவது போஸ்டர் தீபாவளி வாழ்த்துகளுடன் உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். அதோடு, படப்பிடிப்பு தொடங்கிய ஆரம்பகட்டத்திலேயே எடுத்திருந்த ஒரு முக்கியமான முடிவை இப்போது நான் அதிகாரபூர்வமாக அறிவிக்கிறேன்.
`மகுடம்' எனும் இத்திரைப்படம் எனது திரையுலகப் பயணத்தில் நான் இயக்குநராக எடுக்கும் முதல் முயற்சி. இப்படி ஒரு சூழ்நிலையை நான் எப்போதும் எதிர்பார்த்தது இல்லை ஆனால் சில நேரங்களில் சூழ்நிலை நம்மை மிகப் பொறுப்புடனும், என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பும், என் தயாரிப்பாளர்கள் என் மீது கொண்ட நம்பிக்கையும் இப்படி ஒரு முடிவை எடுக்க வைக்கின்றன. இந்த முடிவும் அவ்வாறே. இது ஒரு கட்டாய முடிவு அல்ல; பொறுப்புணர்வின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு.
ஒரு நடிகராக நான் எப்போதுமே நம்புவது திரையுலகையும், என் மீது அன்பும், நம்பிக்கை கொண்ட உங்களையும், என்னை நம்பும் தயாரிப்பாளர்கள் அந்த நம்பிக்கையை காக்கும் பொறுப்பு எனக்கு உண்டு. அதனால்தான் இப்போது நான் இயக்குநராக பொறுப்பேற்று இருக்கிறேன். அதே உணர்வுடன் இந்த தீபாவளிக்கான என் முடிவும் ஒரு புதிய ஒளியான துவக்கம், அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
இப்போது வெளியாகியுள்ள புதிய போஸ்டரில் திரைக்கதை இயக்கம் விஷால் எனவும் கதை ரவி அரசு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதேபோல் ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிஷ்கின் இயக்கி வந்த `துப்பறிவாளன் 2' படத்தை விஷாலே இயக்குவதாக அறிவித்தார். அதுதான் இயக்குநராக அவரின் முதல் படமாக இருக்கும் என எதிர்பார்த்து வந்த சூழலில், ’மகுடம்’ படத்தின் மூலம் இயக்குநராவதாக அறிவித்துள்ளார் விஷால்.